ஆசிரியர்கள் அமர்த்தலில் தாமதம் ஏன்? உடனடியாக அறிவிக்கை வெளியிட வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2023

ஆசிரியர்கள் அமர்த்தலில் தாமதம் ஏன்? உடனடியாக அறிவிக்கை வெளியிட வலியுறுத்தல்

தமிழக அரசுப் பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றுக்கு நடப்பாண்டில் 10,407 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுப் பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றுக்கு நடப்பாண்டில் 10,407 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்து பல மாதங்களாகியும் கூட, ஆசிரியர்களை அமர்த்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என அனைத்துப் பணியிடங்களிலும் ஏராளமானவை காலியாக உள்ளன. அவை அனைத்தும் உடனடியாக நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் முதலமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் வாக்குறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு 10,407 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், அதற்கான கால அட்டவணையையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளியிட்டது. ஆனால், அதன்பின் 8 மாதங்களாகியும் இன்னும் ஒரே ஓர் ஆசிரியர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.


ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட கால அட்டவணைப்படி, 6553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அவர்களைத் தொடர்ந்து 3,587 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய ஏப்ரல் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மூன்றாம் கட்டமாக 267 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எதுவுமே நடைபெறவில்லை.


அதேபோல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கு 4,719 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஜூலை மாதத்திற்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் அனைத்து ஆள்தேர்வு அறிவிக்கைகளும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், 23 வட்டாரக் கல்வி அலுவலர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒரே ஒரு அறிவிக்கை மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. அதற்கான தேர்வும் இன்னும் நடத்தப்படவில்லை.


அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் முதன்மைக் கடமையை செய்வதில் இந்த அளவுக்கு காலம் தாழ்த்துவது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் பணியை தேர்வு வாரியம் நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால், வாரியம் அதன் கடமையிலிருந்து விலகியதால் பாடம் கற்றுத் தர போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அரசு பள்ளிகளின் மாணவர்கள் தவிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.


இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகிய பணிகளுக்கு ஏற்கனவே தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனடிப்படையிலேயே தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அமர்த்தலாமா? அல்லது போட்டித் தேர்வு நடத்தி அதனடிப்படையில் தேர்வு செய்ய வேண்டுமா? என்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம் தான் இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதில் எந்த குழப்பமோ, ஐயமோ தேவையில்லை. தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே இந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.


ஒரே பணிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் தேவையில்லை. கடந்த 2013-ஆம் ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் தகுதித் தேர்வின் அடிப்படையில் தான் அமர்த்தப்பட்டனர். அப்போது போட்டித் தேர்வு நடத்தப்படவில்லை. 2018-ஆம் ஆண்டில் தான் போட்டித் தேர்வு திணிக்கப் பட்டது. ஆனாலும் கூட இன்று வரை அந்தப் போட்டித் தேர்வு நடத்தப்படவில்லை. இன்றைய முதல்வர், நான் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அந்தத் தேர்வை கடுமையாக எதிர்த்தோம். தேவையின்றி முந்தைய ஆட்சியில் திணிக்கப்பட்ட போட்டித் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தாலே அனைத்து சிக்கல்களும் தீர்ந்து விடும். அதை செய்ய தமிழக அரசு மறுக்கிறது.


போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மே மாதம் 9ஆம் நாள் முதல் ஐந்து நாட்களாக சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்திய, தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் பேச்சு நடத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், இந்த சிக்கலில் அடுத்த ஒரு வாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், அதன்பின் 100 நாட்கள் நிறைவடையவிருக்கும் நிலையில் தமிழக அரசு எந்த கொள்கை முடிவு எடுக்காதது நியாயம் அல்ல.


இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் இனி தகுதித் தேர்வில் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுத்து அறிவிக்க வேண்டும். அதனடிப்படையில் ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

11 comments:

 1. தகுதித் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டால் 2013ல் தேர்ச்சி பெற்றவர்கள் 30000 பேர் உள்ளனர். ஆனால் தற்போது வெறும் 3000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.2013ல் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால இன்னும் 15 ஆண்டுகள் ஆகும்.பிறகு எப்படி 2017லிருந்து தேர்ச்சி பெற்றவர்கள் பணிக்கு செல்ல முடியும்.அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.இல்லையன்றால் 2017 லிருந்து தேர்ச்சி பெற்றவர்கள் நீதிமன்றத்திற்கு செல்வார்கள். இதனால் பணி நியமனம் மேலும் தாமதமாகும்

  ReplyDelete
 2. Dted 1999-2001 ,tet pass 2013 and 2017 innum velai yillai epathan velai kidaikkum

  ReplyDelete
 3. Ramadoss sir solvadu thappu..exam matumthan correct.

  ReplyDelete
  Replies
  1. Mooodevi appo 2013 la job ponavangalum competitive exam eluthattum.....

   Delete
 4. 2013 ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கலுக்கு பணி வழங்காமல் , மற்றவர்களுக்கு பணி வழங்க விட மாட்டோம். இதற்காக உச்ச நீதி மன்றம் செல்லவும் தயங்க மாட்டோம். 2017, 2018 என 2100 வரை வந்தாலும் சரி.. அது வரை பணி நியமனம் பொட நீதிமன்றத்தில் தடையாணை பெறுவோம்.

  ReplyDelete
  Replies
  1. தடை ஆணை தருவார்கள்,
   அப்ரம் தடை ஆணை யைப் தள்ளுபடி செய்து விடுவார்கள்,
   அப்போ என்ன பண்றது Sir

   Delete
 5. வெற்றி 2023 க் மட்டுமே

  ReplyDelete
 6. Pg trb physics material available here also year question papers contact number 8667088965

  ReplyDelete
 7. Appointing teachers is good who will give salary. Most of the announcement would wait for finance secretary orders

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி