ஆசிரியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண அரசுக்கு முத்தரசன் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2023

ஆசிரியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண அரசுக்கு முத்தரசன் வேண்டுகோள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அழைத்து பேசி சுமூக தீர்வுக்கு அரசு முயலவேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் செய்வதற்காக வெயிட்டேஜ் மதிப்பெண் முறை (அரசாணை எண்.71) பின்பற்றப்பட்டது.


எனவே ஆசிரியர் பணிநியமனத்தில் கொண்டு வரப்பட்ட வெயிட்டேஜ் என்ற தகுதிக்காண மதிப்பெண் முறையால் பல்வேறுபட்டக் கிராமப்புற மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிகள் பணிவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அரசே முற்றிலும் இந்த வெயிட்டேஜ் முறையை நீக்கிவிட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு பணிநியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை 149-ஐ வெளியிட்டது.


ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் முடித்தவர்களில் பாதிப்பேர் ஏறக்குறைய 24000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீதமுள்ளவர்களுக்கு மட்டும் மற்றுமொரு போட்டித் தேர்வு என்பது முற்றிலும் முரண்பாடாக இருப்பதால், 2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மறுநியமனப் போட்டித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.


கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அழைத்து பேசி சுமூக தீர்வுக்கு அரசு முயலவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி