நிதி நிறுவன மோசடி - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2023

நிதி நிறுவன மோசடி - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

ராமநாதபுரத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான 2 அரசுப்பள்ளி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.


சென்னையைச் சேர்ந்த நீதிமணி, அவரது மனைவி மேனகா மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் `புல்லியன் பின்டெக்' என்ற நிதி நிறுவனம் நடத்தினர். இவர்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்களிடம் 9 சதவீத வட்டி தருவதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு பெற்றனர்.


இந்நிலையில், 2020 மார்ச் முதல் முதலீட்டாளர்களுக்கு வட்டித் தொகை வழங்கவில்லையாம். இதையடுத்து, ராமநாதபுரம் மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த துளசிமணிகண்டன், காரைக்குடி ஆசிரியை கற்பகலில்லி ஆகியோர் போலீஸில் புகார் அளித்தனர்.


அதன்பேரில், ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, நீதிமணி, ஆனந்த் ஆகியோரைக் கைது செய்தனர். தற்போது இவர்கள் இருவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, ராமநாதபுரம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த வழக்கில் தலைமை முகவர்களாகச் செயல்பட்டு, பணமோசடியில் ஈடுபட்டதாக கும்பரம்அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் எம்.ஆரோக்கிய ராஜ்குமார் (45), ராமநாதபுரம் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர் சி.முருகவேல் (42) ஆகியோரை கடந்த 17-ம் தேதி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


மேலும், மதுரை தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, கடந்த 2 நாட்களாக காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். இந்நிலையில், பண மோசடியில் ஈடுபட்டு கைதான ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்குமார், ஆசிரியப் பயிற்றுநர் முருகவேல் ஆகியோரை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. ஆசிரியர்கள் தெய்வத்திற்கு முன்னதாக வைத்துப் போற்றப்படவேண்டியவர்கள்.அவர்கள் மோசடி வேலைகளில் ஈடுபடலாமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி