மாரடைப்பு ஏற்படும் மாணவர்களுக்கு முதலுதவி அளிக்க , சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு சிபிஆர் குறித்த விழிப்புணர்வு முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2023

மாரடைப்பு ஏற்படும் மாணவர்களுக்கு முதலுதவி அளிக்க , சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு சிபிஆர் குறித்த விழிப்புணர்வு முகாம்

இளம் வயதில் மாரடைப்பு - குஜராத் அமைச்சர் அதிர்ச்சி தகவல் ! கடந்த 6 மாதங்களில் 1,052 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் , இதில் 80 % பேர் 11 -25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் குஜராத் கல்வித்துறை அமைச்சர் குபேர் டிண்டோர் தகவல் ! மாரடைப்பு ஏற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி அளிக்க , சுமார் 2 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு சிபிஆர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


அண்மைக் காலமாக இளம் வயதினர் திடீர் திடீர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட பள்ளியில் படிக்கும் 2-ம் வகுப்பு மாணவர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதே போல், இளைஞர்கள் பள்ளி, கல்லூரி, திருமணம் போன்ற நிகழ்வுகளில் நடனமாடும்போது உயிரிழந்தனர்.

மேலும் சில இளைஞர்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது உயிரிழந்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் அரங்கேறி வருகிறது. இதனால் இது போன்ற சம்பவங்கள் கோவிட் தடுப்பூசியால் நிகழ்வதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.


பின்னரே, மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தது. அதன்படி ICMR என்று சொல்லப்படும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து நடைபெற்ற ஆய்வின் முடிவில், உயிரிழப்பு காரணம் கொரோனா தடுப்பூசி இல்லை என்று தெரியவந்தது.

இருப்பினும் அண்மைக்காலமாக இளைஞர்களுக்கு ஏற்படும் திடீர் மரணங்களுக்கான காரணம் என்ன என்று ஆய்வு மேற்கொண்டபோது, உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளதும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும் தான் என்றும் அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 1000-க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குஜராத் மாநில கல்வி அமைச்சர் குபேர் டிண்டோர் (Kuber Dindor) பேசியதாவது, "கடந்த 6 மாதங்களில் குஜராத்தில் மட்டும் மாரடைப்பு காரணமாக 1,052 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் பெரும்பாலாக, சுமார் 80% பேர் 11 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். தினமும் 108 ஆம்புலன்சுக்கு மாரடைப்பு காரணமாக அழைப்பு வருகிறது. கிரிக்கெட் விளையாடும்போது, கார்பா நடனமாடும்போது இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவதை நாம் அறிகிறோம். இதனால் தற்போது மாநில அரசு திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.

அதன்படி இதுபோன்ற திடீர் மாரடைப்பு மாணவர்களுக்கு ஏற்படும்போது, அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்க சிபிஆர் சிகிச்சை குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் 2 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இது வரும் டிசம்பர் 3 (நாளை) முதல் 17-ம் தேதி வரை நடைபெறும்" என்றார்.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தசரா பண்டிகையின்போது குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கார்பா நிகழ்ச்சியில் நடனமாடியபோது, ஒரே நாளில் 10 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டதோடு, 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பது கூடுதல் தகவல்.

1 comment:

  1. எல்லாம் கொரோனா வின் பக்கவிளைவுகள் போலும்??? வாழ்வே மாயம்......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி