பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கக் கோரி வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2024

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கக் கோரி வழக்கு

 

தமிழகத்தில் பணிக்கு செல்லும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பை மருத்துவ சான்றிதழ் கோராமல் வழங்க வேண்டும் எனக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக மத்திய அரசை அணுக மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘மாதவிடாய் காலங்களில் பணிக்குச் செல்லும் பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் மிகுந்த சிரமத்துக் குள்ளாக நேரிடுகிறது. மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. அதற்கு மருத்துவ சான்றிதழ் பெறுவது என்பது இயலாத காரியம்.


பிஹார் மாநிலத்தில் விடுப்பு: பிஹாரில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் காலகட்டங்களில் 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. இதேபோல கேரளாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும், சில தனியார் நிறுவன பெண்களுக்கும் இது போன்ற கால கட்டங்களில் விடுப்பு வழங்கப் படுகிறது. ஆனால் தமிழகத்தில் அது போன்ற நடைமுறை இல்லை. எனவே தமிழகத்திலும் மாத விடாய் கால கட்டங்களில் பெண் ஊழியர்களுக்கு எந்த மருத்துவ சான்றிதழும் கோராமல் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.


தலைமை நீதிபதி அமர்வு: இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ர வர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பாக கொள்கை வகுக்கும் படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை அணுக ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே மனுதாரரும் மத்திய அரசை அணுகலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

1 comment:

  1. ஆயுள் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு ஆண் பெண் பேதம் இன்றி விடுமுறை அளித்து விடலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி