174 தொழில்நுட்ப படிப்புகளுக்கான பாடங்கள் தமிழில் மொழியாக்கம்: சென்னை ஐஐடி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2024

174 தொழில்நுட்ப படிப்புகளுக்கான பாடங்கள் தமிழில் மொழியாக்கம்: சென்னை ஐஐடி தகவல்

 

நிரலாக்கம், தரவு அமைப்புகள், பைத்தானைப் பயன்படுத்தி படிமுறைத் தீர்வு (Programming, Data Structures and Algorithms Using Python) போன்ற அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படிப்புகள் உள்பட 174 தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பாடங்களை சென்னை ஐஐடி என்பிடெல் தமிழில் மொழிபெயர்த்துள்ளது.


இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: நிரலாக்கம், தரவு அமைப்புகள், பைத்தானைப் பயன்படுத்தி படிமுறைத் தீர்வு (Programming, Data Structures and Algorithms Using Python) போன்ற அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படிப்புகள் உள்பட 174 தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பாடங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் உள்ள பாடங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்காக 682 மொழிபெயர்ப்பாளர்கள், 51 தரக்கட்டுப்பாடு (QC) நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டு மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.


இதுதவிர, மொத்தம் 159 தமிழ் இ-புத்தகங்கள் என்பிடெல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் தமிழில் கற்போருக்கு கூடுதல் பாடத்தொகுதிகள் கிடைக்கின்றன. மேலும், 906 மணி நேரத்திற்கு வீடியோ உள்ளடக்கத்திற்கான ஆடியோ உட்பொதிகளும் கிடைக்கின்றன. மொழிபெயர்க்கப்பட்ட பாடங்களை அணுகுதல் மற்றும் புரிதல் குறித்து கற்போரிடம் இருந்து சாதகமான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.


என்பிடெல் பாடங்கள் அசாம், வங்கம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய 11 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பிராந்திய மொழிகளில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, தொழில்நுட்பக் கல்விக்காக ஆங்கிலத்திற்கு மாறும் மாணவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.


இதுகுறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் என்பிடெல்லின் மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் பற்றிய விவரங்களை கீழ்க்காணும் இணையப்பக்கத்தில் காணலாம் - https://nptel.ac.in/translation


தொழில்நுட்பப் பாடங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சி குறித்து எடுத்துரைத்த என்பிடெல் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், ஐஐடி மெட்ராஸ் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் பேராசிரியருமான ராஜேஷ்குமார், “ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென தனி உலகம் உண்டு. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் என் உலகத்தின் எல்லைக்குள்ளேயே முடங்கி விடுவேன். அந்தத் தடையைத் தகர்த்தெறிவதற்கான முயற்சியில் என்பிடெல் ஈடுபட்டுள்ளது” என்றார்.


என்பிடெல் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், ஐஐடி மெட்ராஸ் ரசாயனப் பொறியியல் துறையின் ஆசிரியருமான பேராசிரியர் அபிஜித் பி.தேஷ்பாண்டே கூறுகையில், “மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் இந்தியாவில் கல்வி கற்போருக்கு கிடைக்க என்பிடெல்-சென்னை ஐஐடி புதுமையான வழிகளைப் பின்பற்றியுள்ளது. Subtitles, video Text tracks, Transcripts, Books with slides, Audio tracks போன்றவை இதில் அடங்கும். அறிவியல்/பொறியியல் உள்ளடக்கத்தின் உயர்தர மொழிபெயர்ப்பில் இந்தியாவின் திறனை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்” எனத் தெரிவித்தார்.


என்பிடெல் (தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம்) என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நிதியுதவியுடன் கடந்த 2003-ம் ஆண்டு ஐஐடிக்கள், ஐஐஎஸ்சிக்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும்.


என்பிடெல் தனது நோக்கத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் எல்லோருக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒவ்வொரு செமஸ்டருக்கும் 22 வெவ்வேறு துறைகளில் 700-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கான சான்றிதழ்களை என்பிடெல் வழங்கி வருகிறது.


மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் அனைத்தும் என்பிடெல் தரக்கட்டுப்பாடு (QC) நிபுணர்களால் கடுமையான மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, SWAYAM, NPTEL வலைதளங்களில் PDF transcripts, e-books, subtitles, scrolling text, audio formats ஆகிய வடிவங்களில் இலவசமாக கிடைக்கின்றன.


தற்போது வரை, 163 பொறியியல் படிப்புகள் உள்பட 244 என்பிடெல் படிப்புகளில் 20,000 மணி நேர வீடியோ உள்ளடக்கம் வெற்றிகரமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. துல்லியத்தை உறுதி செய்வதற்கும் ஒட்டுமொத்த கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பச் சொற்கள் ஆங்கிலத்தில் (ஒலிமாற்றம் செய்யப்பட்டவை) இடம்பெற்றுள்ளன. மொழிபெயர்க்கப்பட்ட இந்த டிரான்ஸ்க்ரிப்ட்கள் எளிதான குறிப்புகளுக்காக புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. என்பிடெல் இணையதளத்தில், மொழிபெயர்ப்பு புத்தகங்கள் பக்கத்திலும், ஸ்வயம் இணைய முகவரியிலும் தற்போது பல்வேறு பிராந்திய மொழிகளில் 980 புத்தகங்கள் கிடைக்கின்றன.


என்பிடெல்லின் முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்த ஆர்இசி-யின் சிவில் என்ஜினியரிங் துறை உதவிப் பேராசிரியர் பி.முத்தையன், “சிவில் என்ஜினியரிங் SDOF அமைப்புக்கான கட்டமைப்பு இயக்கவியல் குறித்த என்பிடெல்லின் மொழிபெயர்ப்பு புத்தகம் தமிழ்வழியில் கற்கும் மாணவர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகிய இருதரப்பினருக்குமே பலனளிக்கிறது. புரிந்துகொள்ளக் கூடிய வகையில் எளிமையான முறையில் விவரிக்கப்படுவதால் குறிப்பாக மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.


ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் பேராசிரியரும், கடந்த மூன்றாண்டுகளாக திறனாய்வாளராக இருப்பவருமான டாக்டர் வி.பிரசன்னகுமாரி கூறுகையில், “பொறியியல் கருத்துக்களை எனது தாய்மொழியில் மொழிபெயர்ப்பதற்காக மொழிபெயர்ப்புக்கான திறனாய்வாளராக ஈடுபட்டிருப்பது உணர்வுப்பூர்வமான அனுபவமாகும். தமிழில் பாடங்கள் கிடைப்பதால் மொழி ரீதியான தடைகளைத் தகர்த்தெறிந்து புரிதலை எளிதாக்குகிறது.


இந்த முயற்சியின் வாயிலாக கல்வியில் வெற்றி அதிகரிப்பது மட்டுமின்றி கற்போருக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. பொறியியல் கல்வியை வளப்படுத்தும் இந்த சிந்தனைமிக்க முயற்சிக்கு என்பிடெல் நிறுவனத்தைப் பாராட்டி நன்றி கூறுகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி