நீட் வினாத்தாள் லீக்கானதா? அதிர்ச்சியடைந்த தேர்வு முகமை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2024

நீட் வினாத்தாள் லீக்கானதா? அதிர்ச்சியடைந்த தேர்வு முகமை

 

நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்வு நடந்துக் கொண்டிருக்கும் போதே சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ்-அப்களிலும் நீட் தேர்வு குறித்த வினாத்தாள் வெளியாகி, வைரலாகி வந்தது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


பல மாணவர்கள் நீட் தேர்வுகளுக்காக தனியார், அரசு பயிற்சி மையங்களில் ஒரு வருட காலம் கடுமையாக உழைத்து தயாராகி வரும் நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் வைரலானது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.


இந்நிலையில், நீட் தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகவில்லை என்றும், வினாத்தாளில் தவறு ஏற்பட்டதாகவும் தேசிய தேர்வு முகமை வினாத்தாளின் பிழையை ஒப்புக்கொண்டது. அதே சமயம் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பற்றிய செய்திகளை மறுத்துள்ளது.


நாடு முழுவதும் 557 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானது குறித்து, தீர்க்கமாக மறுத்த தேசிய தேர்வு முகவை, இது குறித்த விசாரணையில் இறங்கியது. 


ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூரில் உள்ள ஆதர்ஷ் வித்யா மந்திர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், நீட் தேர்வை எழுத வந்திருந்த இந்தி மீடியம் மாணவர்களுக்கு ஆங்கில வினாத்தாள் வழங்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர். இது தான் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.


ராஜஸ்தானில் ஆதர்ஷ் வித்யா மந்திர்  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்தி மொழிப்பாட மாணவர்களுக்கு ஆங்கில வழி வினாத்தாள் தவறுதலாக வழங்கப்பட்டது, கண்காணிப்பாளர் தன்னுடைய தவறைச் சரிசெய்யும் நேரத்தில், மாணவர்கள் அதிருப்தியில் வினாத்தாளை எடுத்துக் கொண்டு தேர்வு அறையை விட்டு வேகமாக வெளியேறினார்கள் என்று தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தேர்வு விதிகளின்படி, மாணவர்கள் தேர்வு முடிந்ததும் வினாத்தாளுடன் மட்டுமே மண்டபத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். சில மாணவர்கள் இந்தி மொழியில் தேர்வு எழுத வந்திருந்த நிலையில், ஆங்கில வினாத்தாள் வழங்கப்பட்டதும் உடனடியாக தேர்வு அறையில் இருந்து வெளியேறினார்கள். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் இணையத்தில் வினாத்தாள்கள் பரப்பப்பட்டது. அந்த நேரத்தில் மற்ற எல்லா மையங்களிலும் தேர்வு ஏற்கனவே தொடங்கி விட்டது என்று அதிகாரி கூறினார். எனவே, நீட் தேர்வுக்கான வினாத்தாள்களில் கசிவு எதுவும் இல்லை என்று கூறினார்.


NEET-UG 2024 தேர்வு நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நீட்-யுஜி தேர்வுக்கு 23 லட்சம் பேர் பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர். அவர்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், 13 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மற்றும் 24 மாணவர்கள் மூன்றாம் பாலினத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.


பிராந்திய வாரியாக, உத்தரப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் (3,39,125 தேர்வர்கள்) பதிவு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 2,79,904, மற்றும் ராஜஸ்தான் 1,96,139. தென் மாநிலங்களான தமிழகத்தில் 1,55,216 விண்ணப்பதாரர்களும், கர்நாடகாவில் 1,54,210 பேரும் விண்ணப்பித்துள்ளனர். 2023ம் ஆண்டில், மொத்தம் 20,87,449 விண்ணப்பதாரர்கள் NEET-UG 2023 க்கு பதிவு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி