“அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவை கைவிடுக” - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2024

“அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவை கைவிடுக” - தினகரன்

 

"அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்" என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 40 சதவிகிதம் பேர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், அவர்களுக்கான பணப்பலன்களை வழங்குவதற்கான நிதி இல்லாத காரணத்தை சுட்டிக்காட்டி திமுக அரசு இம்முடிவை எடுத்திருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.


அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும், அரசுத் துறைகளில் உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் தமிழக இளைஞர்களால் நிரப்பப்படும் என்ற வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவரைக் கூட இன்று வரை நியமிக்க முடியாத சூழலில்தான் தள்ளாடிக் கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் நன்கறிவர்.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிலவும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வராத திமுக அரசால், வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, அரசுப் பணியை எதிர்நோக்கி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கையும் சுமார் 80 லட்சத்தை கடந்திருக்கிறது.


இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதால், ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்களுக்கான பதவி உயர்வு பாதிக்கப்படுவதோடு, அரசுப் பணி கனவில் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமும் அடியோடு சீர்குலையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 


எனவே, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் இம்முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தமிழக அரசுத் துறைகளில் நிலவும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. அட்சிக்கு வந்து நான்கு வருடமாக. ஏமாற்றியது போதும் நிரந்தரமாக ஏமாற்றும் வழி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி