தமிழ்வளர்ச்சித் துறையில் முதல்முறையாக உதவி இயக்குநர்கள் நேரடி நியமனம்: டிஎன்பிஎஸ்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2024

தமிழ்வளர்ச்சித் துறையில் முதல்முறையாக உதவி இயக்குநர்கள் நேரடி நியமனம்: டிஎன்பிஎஸ்சி

 

தமிழ்வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்கள் முதல்முறையாக நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின்படி தமிழக அரசின் அனைத்து துறைகள், வாரியங்கள், பொதுத்துறை மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் தமிழை முழுமையாக பயன்படுத்தும் நோக்கில் தமிழ்வளர்ச்சித் துறை இயங்கி வருகிறது. தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் இயங்கும் இத்துறையின் தலைமை பொறுப்பில் இயக்குநரும், அவருக்கு கீழ் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அலுவலர்களும் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட அளவில் உதவி இயக்குநர்களும், மண்டல அளவில் (சேலம் மற்றும் திருநெல்வேலி) துணை இயக்குநர்களும் உள்ளனர்.


தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவி இதுவரை பதவி உயர்வு மூலமாக மட்டுமே நிரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்பட உள்ளது. அந்த வகையில் தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவியில் 13 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்குரிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று (ஆக.31) வெளியிட்டுள்ளது.


அதன்படி, தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 34 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் 3 பகுதிகளைக் கொண்ட இந்த தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு மற்றும் பொது அறிவுத்தாள் தேர்வு நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்மொழி தாள் தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்முகத்தேர்வு உள்ளவை) தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் தேர்வு மட்டுமின்றி அரசு கலைக் கல்லூரி நூலகர், அரசு சட்டக்கல்லூரி நூலகர், கால்நடை மருத்துவர், கணக்கு அலுவலர், உதவி மேலாளர் உள்பட 26 வகையான பணிகளுக்கான தேர்வுகளும் இடம்பெற்றுள்ளன.


இத்தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்டம்பர் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு மையம், வெவ்வேறு தேர்வுகளுக்கான பதவிகள், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தெரிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநராக பணியில் சேருவோர் துணை இயக்குநர், இயக்குநர் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி