பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற கல்லூரிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டுக்கான (2024 - 25) பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளை வழங்கும் உயர் கல்விநிறுவனங்கள் ஏஐசிடிஇ அனுமதி பெறும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே ஏஐசிடிஇ-யின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களைப் பெற முடியும். இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் தொடங்கி ஜூலை மாதம் வரை நடைபெற்றது. ஏராளமான கல்லூரிகள் பதிவு செய்து அனுமதியை பெற்றுக் கொண்டன.
இந்நிலையில் பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கல்லூரிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டு வருகின்றன. அதை ஏற்று கல்லூரிகள் பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து விருப்பமுள்ள கல்லூரிகள் www.aicte.india.org என்ற இணையதளம் வழியாக செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த முறை விண்ணப்பிக்கும் போது தாமதக் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட வலைத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் அறிவோம்! " தமிழச்சி "
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2024/09/blog-post_13.html