"2026-ல் முதல்வர் ஸ்டாலினை எதிர்கட்சித் தலைவராக்க தயார்" - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2024

"2026-ல் முதல்வர் ஸ்டாலினை எதிர்கட்சித் தலைவராக்க தயார்" - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்

"எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அந்தப் பதவியையே அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம்" என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்பதால் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு கூறி வருகிறது.

முன்னதாக, அதிமுக ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் போராடியபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், அரசு ஊழியர்கள் பக்கம் நின்றதோடு, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்திருந்தார். மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் அது இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தாமல் இழுத்தடித்து வருவதால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் தேடி வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'தேனாறும், பாலாறும் ஓடும்' என்றவாறு தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தார். 2021-ல் சட்டமன்றத் தேர்தலின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.

ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, 24 மாதகால அகவிலைப்படி, ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை முடக்கி, அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் அவரின் சாதனையாக உள்ளது.

தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்.

உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால், நிதிநிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழக முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பார்களா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த சிபிஎஸ் சந்தா தொகை தமிழக அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தற்போது ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை அரசு ஊழியர்களுக்கும் வரப்போகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 comments:

  1. எதிர்கட்சி தலைவராக கூட வரக்கூடாது

    ReplyDelete
    Replies
    1. நாம் அனைவரும் இவர்கள் எதிர் கட்சியாக கூட வராமலிருக்க இரவும் பகலும் பாடுபட வேண்டும். இறை சக்தி கண்டிப்பாக நமக்கு பக்க பலமாய் இருக்கும். நமோ நாராயண.

      Delete
  2. யார் வரவேண்டும் வந்தால் பாலாறும் தேனாறும் ஓடுமா?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அன்பில் மகேஷ்ஷால் ஸ்டாலின் பகுதிநேரஆசிரியரிடம் அன்பு இல்லாமல்போனார்.

    ReplyDelete
  5. 2026 இல் எதிர்கட்சிதலைவராக்க பாடுபடுவோம்

    ReplyDelete
  6. We trust Stalin. before election he favour for consolidated staffs in samagra shiksha

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி