மத்திய அரசு நிதி நிறுத்தும் எதிரொலி: மாநில நிதி ரூ.189 கோடி மூலம் அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2025

மத்திய அரசு நிதி நிறுத்தும் எதிரொலி: மாநில நிதி ரூ.189 கோடி மூலம் அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு


தமிழகத்தில் ரூ.189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும், அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையின் விவரம்: தமிழகத்தில் 24,338 தொடக்கப் பள்ளிகள், 6,992 நடுநிலை பள்ளிகள், 3,094 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 3,129 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 37,553 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி பெறுதல், ஒராண்டுக்கான கட்டணத்தை ஒரே தவணையாக செலுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளவும் நிதி தேவைப்படுகிறது. இதுதவிர தகைசால் பள்ளிகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட மேல்நிலைப் பள்ளிகளில் 100 எம்பிபிஎஸ் இணைய வேகம் போதுமானதாக இல்லை. எனவே, இத்தகைய பள்ளிகளில் 1 ஜிபிபிஎஸ் இணையதள வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக ரூ.189 கோடியே 11 லட்சத்து 26 ஆயிரம் தேவைப்படுகிறது என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார். அதையேற்று அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதியை ஏற்படுத்த ஆணையிடப்படுகிறது. அதற்கான கட்டணத்தை பள்ளிகள் அமைந்துள்ள சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளே (ஊரக, நகராட்சி, மாநகராட்சி) செலுத்த வேண்டும். பேரூராட்சி ஆளுகைக்குட்பட்ட அரசுப் பள்ளிகளுக்கான இணைய வசதி கட்டணம் மட்டும் ரூ.5.49 கோடியை மாநில நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.


முன்னதாக, இந்தப் பணிகள் அனைத்தும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது அதற்கான நிதியை மத்திய அரசு நிறுத்திவிட்டதால் மாநில நிதியில் இருந்து அவற்றை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. பாடம் நடத்த முதலில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்யுங்கள் டா..... பிறகு இணைய தள வசதி கொண்டு வரலாம்.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி