2023 வரை TET விலக்கு கொடுத்த முதல்வரே! 2013 க்கும் கருணை காட்டுங்கள்! - AIDED ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2025

2023 வரை TET விலக்கு கொடுத்த முதல்வரே! 2013 க்கும் கருணை காட்டுங்கள்! - AIDED ஆசிரியர்கள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,


தலைப்பு: அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 16.11.2012க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நிபந்தனையில் தளர்வு வழங்கக் கோருதல் தொடர்பாக.

மாண்புடன் வணங்குகிறோம்.

பள்ளிக் கல்வித் துறையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளபோதும், பெரும்பாலான வழக்குகள் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) சார்ந்தவையாக உள்ளன. இந்த சூழலில், இந்தியாவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (RTE Act) அமலாகிய நாள் (01.04.2010) முதல் 2023 பிப்ரவரி மாதம் வரை சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் இல்லை என தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது.

இதே நேரத்தில், அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 2013 ஆம் ஆண்டிற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் சுமார் 600 பேர் மட்டுமே உள்ளனர். அதன் பின்னர், அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் TET இன்றி நியமனங்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், கடந்த 13 ஆண்டுகளாக எந்தவிதமான பணி பாதுகாப்பும் இன்றி, நிரந்தர பணியிடங்களில் மிகுந்த மன உளைச்சலுடன் பணிபுரிந்து வரும் 16.11.2012க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, தற்போதைய சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்குக் கிடைத்திருக்கும் அனுகூலத்தைப் போலவே, ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனையில் தளர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நியாயமான கோரிக்கையாகும்.

இந்த கோரிக்கையை கடந்த பல வருடங்களாக பல்வேறு அரசுகள், அதிகாரிகள், ஊடகங்கள் மற்றும் பிற வாயிலாக எந்நேரமும் எடுத்துரைத்துள்ளோம். இருப்பினும் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படாமை எங்களுக்கு பெரும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலாகிய 01.04.2010 முதல் 16.11.2012 வரையிலான காலப்பகுதியில் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனையில் தளர்வு வழங்கி, அவர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு எமது மனப்பூர்வமான வேண்டுகோளை மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உரிக்கின்றோம்.

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் 110-வது விதியின் கீழ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டால், எங்கள் வாழ்வாதாரம் ஒரு உறுதியான பாதையில் முன்னேறும் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

உங்களது நியாய உணர்விலும், கல்விக்காக மேற்கொள்ளும் உங்கள் சிறப்பான முயற்சிகளிலும் நாங்கள் முழு நம்பிக்கையுடன் இக்கடிதத்தை சமர்ப்பிக்கிறோம்.

இப்படிக்கு,
16.11.2012க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி நிரந்தர ஆசிரியர்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி