தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சியில் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகத்தால் நடத்தப்பட்ட The National Means Cum Merit Scholarship தேர்வின் முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில், அதில் அதிக மதிப்பெண் பெற்ற பலர் தேர்வு செய்யப்படவில்லை என்றும், அதே நேரத்தில் குறைந்தபட்ச மதிப்பெண்களைக் கூட பெறாத பலர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களின் கல்வி தொடர்பான விவகாரத்தில் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டப்படுவது சரியல்ல.
தேசிய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்காக மாணவர்களுக்கு இரு தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு தேர்விலும் குறைந்த பட்சம் 40% மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சிக்கு தகுதி பெறுவார்கள். அவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற 6,695 பேர் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் விதியாகும்.
ஆனால், தமிழக அரசின் தேர்வுத்துறை தயாரித்த பட்டியலில் ஒரு தேர்வில் 40% மதிப்பெண் பெறாத மாணவர்கள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னொரு தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருப்பதால், இரண்டிலும் சேர்த்து சராசரியாக 40%க்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றிருப்பதாகக் கூறி அவர்கள் கல்வி உதவித் தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இரு தேர்விலும் குறைந்தது 40% மதிப்பெண் பெற்ற பலர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது தவறு மற்றும் சமூக அநீதி ஆகும்.
தேசிய கல்வி உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படுவது மாணவர்களுக்கு மதிப்பு சேர்க்கும் விஷயமாகும். அதற்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்கும் மாணவர்கள், பட்டியல் தயாரித்தவர்கள் செய்த குளறுபடியால், தேர்ந்தெடுக்கப்படாமல் போகும் போது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அது அவர்களின் கல்வியையும் பாதிக்கும். இப்படி ஒரு நிலை ஏற்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
எனவே, இந்த சிக்கலில் தமிழக முதல்வர் தலையிட்டு, தேசிய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இரு தேர்வுகளிலும் தலா 40% மதிப்பெண் என்ற அடிப்படைத் தகுதியை பெற்ற மாணவர்களை மட்டும் வைத்து புதிய பட்டியல் தயாரித்து வெளியிட வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி