தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2025

தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

 

தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு மேலும் சில சிரமங்கள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.


நகைக்கடன் வழங்குவதில் சமீபகாலமாக ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் நலன் காக்கவே இந்த விதிமுறைகளை அமல்படுத்தி வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.


இந்நிலையில், தற்போது புதிதாக 9 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


அதன்படி, வங்கிகள் அல்லது வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் இனி தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் வரையே கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


என்ன விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன?

நகையை அடமானம் வைக்கச் செல்பவர்கள், அதற்கான உரிமை ஆவணங்களை அதாவது, ரசீது உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


நகையை அடமானம் வைப்பவர்கள், வங்கியிடமிருந்து அதன் தூய்மைச் சான்றிதழை பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


ஏற்கெனவே, தங்கத்தை மதிப்பீடு செய்யும் நடைமுறை வங்கிகளில் உள்ள நிலையில், கூடுதலாக அதற்கு சான்றிதழை பெற வேண்டும். தங்க நகைகள், ஆபரணங்களுக்கு எப்போதும்போல நகைக்கடன் வாங்க முடியும். ஆனால், வங்கிகளால் விற்கப்படும் தங்க நாணயங்களை மட்டுமே அடமானம் வைக்க முடியும், பிற கடைகளின் நாணயங்கள் ஏற்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில், வரவேற்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வெள்ளிக் கட்டிகள், ஆபரணங்கள், பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.


ஒரு கிலோவுக்கு மேல் நகையை அடகு வைக்க அனுமதி கிடையாது என்றும் பிணையாக வைக்கப்படும் தங்கத்தின் தூய்மை 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல, வெள்ளியின் தூய்மை 999ஆக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறை..

நகைக்கடன் வாங்குபவர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான கடன் ஒப்பந்தத்தில் எதற்காக தங்கத்தை அடகு வைக்கிறார்கள், எவ்வளவு தங்கம் வைக்கப்படுகிறது உள்ளிட்ட முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும். காலதாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.


தங்க நகைகளை அடமானம் வைத்தவர்கள் ஓராண்டிற்குள் முழுதொகையையும் செலுத்திய பிறகே மறு அடகு வைக்க முடியும் என ஏற்கெனவே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் புதிய கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் மீண்டும் அடகு கடைகளை நோக்கி செல்லும் நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி