பொறியியல் உயர்க் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வில், சரியான கல்லூரியை அடையாளம் காண்பது என்பது மாணவர் தரப்பில் தலைவலி தரக்கூடியது. நூற்றுக்கணக்கான கல்லூரிகளில் உகந்த கல்லூரிகளை, தனிப்பட்ட தெரிவுகளின் அடிப்படையில் பட்டியலிடுவது பெரும் சவாலானது. கலந்தாய்வு நடைமுறைகளி ல் பங்கேற்பதற்கு முன்னரே வசிப்பிடத்துக்கு அருகிலிருக்கும் பொறியியல் கல்லூரிகள் பக்கம் பெற்றோர் விசாரிக்க ஆரம்பித்திருப்பார்கள்.
பலநூறு கல்லூரிகள் பரிசீலனையில் இருக்கும் போது, பள்ளிக்கூடம் போல கல்லூரிகளையும் அருகில் உள்ள திசைகளில் தீர்மானிப்பது ஏற்புடையது அல்ல. கல்லூரிப் பருவத்தில் காலடி வைக்கும் வளரும் மாணவர்க ளை சற்று விட்டுப்பிடிக்கலாம். நல்ல கல்லூரிகள் தொலைவில் இருந்தாலும், அதில் விரும்பிய பாடப்பிரிவு கிடைப்பின் அதற்கு முன்னுரிமை தருவதே நல்லது.
கல்லூரி காலம் என்பது பாடங்களை படிப்பது மட்டுமல்ல. அடுத்த சில வருடங்களில் சமூகத்தில் இரண்டறக் கலப்பதற்கும், சக மனிதர்களுடன் ஊடாடி முன்னேறுவதற்குமான பாடத்தையும் வழங்கக் கூடிய இடம். கல்லூரிகள் வாயிலாகவே மாணவர்களுக்கு உலகத்தின் மீதான பார்வை விரிவடைய வாய்ப்பாகும்.பள்ளிக் கூடம் போல வீட்டின் அருகிலேயே கல்லூரிகளையும் தீர்மானிப்பது மாணவர்களை முடக்கவே செய்யும்.
‘மிகச் சிறந்த கல்லூரி உள்ளூரிலேயே அமைந்திருக்கிறது, மாணவரின் தனிப்பட்ட உடல் நலன் பராமரிப்பு க்கு அவசியமாகிறது’ என உரிய காரணங்கள் இருந்தால் மட்டும், அருகில் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்யலாம். மற்றபடி சரியான கல்லூரி தொலைவில் இருப்பினும் கலந்தாய்வில் அதற்கு முன்னுரிமை தருவதே நல்லது.
கல்லூரிகளை தேர்வு செய்வதில், சில பெற்றோர் வலிய அரசுக் கல்லூரிகளை தவிர்ப்பார்கள். அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அதிகம் சுதந்திரம் தருகிறார்கள்; அவர்களை கட்டுப்படுத்து வது, கண்டிப்பது இல்லை; இதனால் படிப்பு பாழாகும், இளம் வயதில் அவசியமான ஒழுக்கம், கெடும் என்றெல்லாம் பரவலான காரணங்களை பெற்றோர் அடுக்குவார்கள். மாறாக, அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு கலந்தாய்வில் அதிகம் முன்னுரிமை தருவதே நல்லது.
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் தரவரிசைப் பட்டியல் உதவியோடு, தேர்ச்சி விழுக்காடு குறைந்த ஒரு சில அரசு பொறியியல் கல்லூரிகளை தவிர்த்து விடலாம். இதர அரசு கல்லூரிகளில் விருப்பமான பாடப்பிரிவு கிடைப்பின் அவற்றை கலந்தாய்வில் பரிசீலிப்பதே நல்லது.
அரசு கல்லூரிகளுக்கு முன்னுரிமை தருவதில் முக்கிய காரணம், கட்டணம் என்பது பெயரளவில் இருப்பதே ஆகும். தனியார் கல்லூரிகளோடு ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த கல்விச் செலவும் பெருமளவு மிச்சமாகும். அந்த செலவில், மாணவருக்கு அவசியமான சிறப்பு கணினி கல்வி, பிரத்யேக லேப் டாப் உள்ளிட்ட அத்தியாவசியங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
உயர்க் கல்வி நிலையங்களையும், பள்ளிக்கூடங்கள் போல பாவிப்பது பெற்றோரின் அறியாமை. சில தனியார் கல்லூரிகள், தேர்ச்சி விழுக்காட்டில் முன் நிற்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் மாணவர்களை கசக்கிப் பிழிகின்றன. பள்ளிக்கூடங்கள் போல தினசரி தேர்வு நடத்துகின்றன. இதனால், உயர்க்கல்விக்கு அவசியமான, பாடப்புத்தகங்களுக்கு அப்பாலான துறை சார் அறிவு மாணவர்களுக்கு குறைய காரணமாகிறது.
அரசுக் கல்லூரிகளில் அப்படியான நெருக்கடி தருவதில்லை என்பதால், அங்கே உயர்க் கல்விக்கு அவசியமான இயல்பூக்கமும், சுதந்திரமான கற்றலும், படைப்பாற்றலும் மிளிர வாய்ப்பாகிறது. மாணவரின் மதிப் பெண்ணுக்கு அரசு பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்குமெனில், பல மடங்கு கட்டணம் செலுத்தி தனியார் கல்லூரிகளை நாடுவதை தவிர்க்கலாம்.
பொதுவாக, பள்ளிப்படிப்பு வரையிலான பிள்ளைகளின் வளர்ப்பில் அவசியமான கண்டிப்பு மற்றும் முறையான வழிகாட்டுதலை பெற்றோர்கள் வழங்கியிருந்தால், அவர்களின் உயர்க் கல்விக்காக எந்த தூர தேசத்துக்கும் நம்பிக்கையோடு வழியனுப்பி வைக்கலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி