தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை என்பதால் கல்விக்காக வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை’ என தமிழக அரசு தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம் விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளது.
‘மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற அமைப்பின் நிர்வாகியான கோவை வே.ஈஸ்வரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.
ஆனால், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் இந்தாண்டுக்கான சேர்க்கை இதுவரையிலும் தொடங்கவில்லை. எனவே 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.
2021-ம் கல்வியாண்டு முதல்... இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இதற்கான கல்வி கட்டணத்தில் 60 சதவீத தொகையை மத்திய அரசும், 40 சதவீத தொகையை மாநில அரசும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு கடந்த 2021-ம் கல்வியாண்டு முதல் இந்த சட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை தமிழகத்துக்கு வழங்கவில்லை.
இதனால் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, மத்திய அரசின் பங்களிப்பு இல்லாமல் 100 சதவீத தொகையையும் தானே பொறுப்பேற்று வழங்கி வருகிறது. இந்தச் சூழலில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கான கூட்டம் மே 28-ம் தேதி நடைபெறவுள்ளது. கல்விக்கான நிதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு ஏன் ஒதுக்கவில்லை?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாபு, ‘‘அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில காரணங்களுக்காக தமிழக அரசுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை’’ என்றார்.
அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘மத்தியில் ஆளும் பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு எம்.பி. கூட இல்லை என்பதால் கல்வி திட்டங்களுக்காக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியைக்கூட மத்திய அரசு ஒதுக்க மறுத்து வருகிறது’’ என பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
அதையடுத்து நீதிபதிகள், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறி்த்த விவரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி