Special TET நடத்தும் முடிவு ஏன்? 5 கேள்வி - பதில்கள் (BBC கட்டுரை) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2025

Special TET நடத்தும் முடிவு ஏன்? 5 கேள்வி - பதில்கள் (BBC கட்டுரை)

 

ஆசிரியராக பணியில் தொடர்வதற்கு டெட் தேர்ச்சி கட்டாயம்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வை (டெட்) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது.


'தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், சிறப்பு தகுதித் தேர்வு நடத்துவது அவசியமற்றது' என ஆசிரியர் சங்கங்கள் விமர்சிக்கின்றன.


ஆசிரியர் தகுதித் தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறது? ஆதரவும் எதிர்ப்பும் உணர்த்துவது என்ன?


இந்தியாவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் 2012-ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. டெட் தேர்ச்சி அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெற்று வருகின்றன.


உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?


'தற்போது பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் டெட் தேர்ச்சி பெற வேண்டும்' என, கடந்த செப்டெம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆசிரியர் தரத்துக்கான அளவுகோலாக டெட் தேர்ச்சி பார்க்கப்படுவதாக நீதிபதிகள் தீபான்கர் தத்தா, மன்மோகன் அமர்வு கூறியுள்ளது.


அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ஏபடி தரமான கல்விக்கான தேவையாக டெட் தேர்ச்சி உள்ளதாகக் கூறிய உச்ச நீதிமன்றம், 'ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாக பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்ச்சி பெறாமல் ஓய்வுபெறும் வயதுவரை பணியாற்றலாம்' எனவும் தெரிவித்துள்ளது.


அதேநேரம், 'அவர்கள் யாராவது பதவி உயர்வுக்கு வர விரும்பினால் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' எனவும் 'தேர்வு எழுத விருப்பம் இல்லாத ஆசிரியர்களுக்கு ஓய்வுகால பலன்களை வழங்கி கட்டாய ஓய்வை அரசு வழங்கலாம்' எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


"இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறுமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் உள்ளனர்" எனக் கூறுகிறார், தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன்.


தமிழ்நாடு முழுவதும் டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்துள்ள நிலையில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் யாரும் அச்சமடைய தேவையில்லை. சட்டரீதியாக போராடுவோம்" என, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


தீர்ப்பு தொடர்பாக சட்ட நிபுணர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டது.


இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவைத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


சிறப்புத் தகுதித் தேர்வு - அரசாணையில் என்ன உள்ளது?


உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நிலையில், 'அரசுப் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு (2026) மூன்று முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக, அக்டோபர் 13 அன்று அரசாணை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ளார்.


அதில், 'உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அதிக அளவிலான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்' எனக் கூறப்பட்டுள்ளது.


'தொடர் பதவி உயர்வு பெறுவதற்கும் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்களின் பதவி உயர்வும் பாதிக்கப்படும்' என, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.


'ஆசிரியர்களுக்கு அதிக வாய்ப்பை வழங்கும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்' எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் கடிதம் மூலமாக கூறியுள்ள கருத்துகளும் அரசாணையில் இடம்பெற்றுள்ளது. அந்தக் கடிதத்தில், 'தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் இதுநாள் வரை டெட் தேர்ச்சி பெறாதவர்கள்' எனக் கூறியுள்ளார்.


'நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு மூன்று முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதன் மூலம் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்' எனவும் பி.ஏ.நரேஷ் தெரிவித்துள்ளார்.


தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாவட்டம்தோறும் வார இறுதி நாட்களில் பணியிடைப் பயிற்சி வழங்கலாம் எனவும் தொடக்கக்கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் தெரிவித்துள்ளார்.


அந்தவகையில், 'தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு மட்டும் 2026 ஆம் ஆண்டில் ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது' என பள்ளிக்கல்வித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.


ஆதரவும் எதிர்ப்பும் சொல்வது என்ன?


சிறப்புத் தகுதித் தேர்வை நடத்த வேண்டிய அவசியம் என்ன?' என கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.முருகன்.


உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சிறப்பு தகுதித் தேர்வை நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது ஆசிரியர் சங்கங்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


"மறுஆய்வு மனுவை நீதிமன்றம் எவ்வாறு எடுத்துக் கொள்கிறது எனப் பார்த்துவிட்டு தேர்வு தேதியை அறிவித்திருக்கலாம்" எனக் கூறுகிறார், தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.முருகன்.


பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு பத்து நாட்களுக்குள் சிறப்பு டெட் தேர்வுக்கான தேதியை அறிவிக்கிறார்கள் என்றால், தீர்ப்பை மாநில அரசு ஏற்றுக் கொண்டதாகவே பார்க்க முடிகிறது" எனக் கூறுகிறார்.


"டெட் தேர்ச்சி பெறுவதற்கு 2 ஆண்டுகால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. தீர்ப்பு வெளிவந்து ஒரு மாதம் ஆகிறது. அரசுடன் சேர்த்து ஏழு ஆசிரியர் சங்கங்களும் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில் சிறப்புத் தகுதித் தேர்வை நடத்த வேண்டிய அவசியம் என்ன?" எனவும் கேள்வி எழுப்புகிறார்.


ஆனால், இதனை மறுத்துப் பேசும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில், "தமிழ்நாடு அரசு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. தீர்ப்பை அமல்படுத்துவதற்கு அரசின் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் கேள்வி எழுப்பும். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் தேர்வு தேதியை அரசு அறிவித்துள்ளது" என்கிறார்.


"ஆண்டுக்கு மூன்று முறை டெட் தேர்வை நடத்த உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆனால், நான்கு முறை நடத்துமாறு எங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.


"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஆசிரியர்களுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் மூன்று முறை தேர்வை நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தேர்ச்சி பெறாவிட்டால் மறுமுறை எழுதுவதற்கு வசதியாக இரண்டு வாய்ப்புகள் கூடுதலாக வழங்கப்படுகின்றன" எனவும் ச.மயில் குறிப்பிட்டார்.


எப்படி நடத்தப்படுகிறது டெட் தேர்வு?


படக்குறிப்பு,ஆண்டுக்கு மூன்று முறை டெட் தேர்வை நடத்த உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) தாள் ஒன்று, தாள் இரண்டு என இரண்டு பிரிவுகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தாள் 1 தேர்வையும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் தாள் 2 தேர்வையும் எழுத வேண்டும்.


தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் பொதுப் பிரிவு தேர்வர்கள் 90 (60 சதவீதம்) மதிப்பெண்ணும் இடஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்கள் 82 மதிப்பெண்ணையும் (55 சதவீதம்) எடுக்க வேண்டும்.


தேர்வில் கலை மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு தனித்தனியாக கேள்வித்தாள்கள் தயார் செய்யப்படுகின்றன. கலைப் பிரிவு தேர்வர்களுக்கு தமிழ், ஆங்கிலம், உளவியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கும் சமூக அறிவியல் பாடத்தில் இருந்து 60 மதிப்பெண்ணுக்கும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.


அறிவியல் பிரிவு தேர்வர்களுக்கு தமிழ், ஆங்கிலம், உளவியல், அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன.


இதற்கான கேள்விகள் அனைத்தும் 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து கேட்கப்படுகின்றன. அதேநேரம், சிறப்பு தகுதித் தேர்வை எழுத உள்ள ஆசிரியர்கள் பணி அனுபவம் உள்ளவர்கள் என்பதால் அதற்கேற்ப வினாத்தாள் வடிவமைக்கப்பட உள்ளதாக ஆசிரியர்கள் மத்தியில் பேசப்படுகிறது.


பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் இது குறித்து பிபிசி தமிழ் கேட்டது. பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படும் முறை இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனை வரும் வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்க உள்ளது" என்கிறார்.


"ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதால் அதற்கேற்ப தேர்வு முறை வடிமைக்கப்பட உள்ளது" எனவும் அவர் பதில் அளித்தார்.


டெட் தேர்வு மிகக் கடினமானதாக உள்ளது' என்கிறார் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில்.


டெட் தேர்ச்சி பெற்றால் வேலை கிடைத்துவிடுமா?


இந்தியாவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.


"தற்போது வரை ஐந்து முறை மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதிலும், சுமார் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. அந்தளவுக்கு மிகக் கடினமானதாக டெட் தேர்வு உள்ளது" என்கிறார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில்.


ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, தேர்வை எழுதிய மாணவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் வரை தோல்வியடைந்துள்ளதைப் பார்க்க முடிந்தது.


ஆனால், டெட் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணி கிடைப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கூறுகிறார், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தின் மாநில தலைவர் இளங்கோவன்.


"மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்யும் வகையில் டெட் தேர்ச்சியை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், மாணவர் நலன்களை கருத்தில் கொள்ளாமல் அரசு எடுக்கும் முடிவுகளால் தகுதித்தேர்வின் நோக்கம் நீர்த்துப் போகிறது" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய இளங்கோவன், "50 வயதைக் கடந்தும் ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டெட் தேர்ச்சி பெற்றவர்கள் காத்துள்ளனர். ஆனால், ஆண்டுக்கு மூன்று முறை சிறப்புத் தேர்வு நடத்தி பணியில் உள்ள ஆசிரியர்களை அரசு காப்பாற்றப் போராடுகிறது" என்கிறார்.


டெட் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணி கிடைக்காமல் தற்போது இறைச்சிக் கடையில் பணிபுரிவதாகக் கூறும் இளங்கோவன், "அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரிவதற்குக்கூட டெட் தேர்ச்சி அவசியம். ஆனால், நிரந்தரமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்ச்சி அவசியம் என நீதிமன்றம் கூறுவதில் என்ன தவறு?" என கேள்வி எழுப்பினார்.


"சிறப்பு தகுதித் தேர்வு என்பது முறைகேடுகளுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். இதனால் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு" எனவும் அவர் தெரிவித்தார்.


இதனை மறுத்துப் பேசும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில், "முப்பது ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடைமுறை இருந்ததோ அதன்படியே ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். அவர்கள் டெட் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி வெளியே அனுப்புமாறு கூறுவது நியாயமற்றது" என்கிறார்.


டெட் தேர்ச்சி பெற்றவர்களை காலிப் பணியிடங்களில் நிரப்புமாறு அரசுக்கு தாங்கள் கோரிக்கை வைப்பதாகக் கூறும் ச.மயில், "புதிதாக ஆசிரியர் பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு டெட் தேர்ச்சி அவசியம் என்பதை நாங்களும் வலியுறுத்தி வருகிறோம்" என்கிறார்.


தொடக்கக் கல்வி இயக்குநகரத்தின்கீழ் நடப்பு ஆண்டில் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


இதனை மேற்கோள் காட்டிப் பேசும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தின் மாநில தலைவர் இளங்கோவன், "டெட் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் அறுபதாயிரத்தைத் தாண்டிவிட்டது. ஆனால், பணி நியமனங்கள் போதிய அளவில் இல்லை" எனக் கூறுகிறார்,


இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது.


பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "தேர்ச்சி பெறாதவர்களை உடனே வீட்டுக்கு அனுப்பிவிட முடியாது. சிறப்புத் தகுதித் தேர்வு தேவையா எனக் கேள்வி எழுப்புகிறவர்கள், இதே ஆசிரியர்களிடம் படித்தவர்கள்தான். தீர்ப்பின் அடிப்படையிலேயே தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது" என்கிறார்.


"தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுவைத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு காலதாமதம் ஏற்படலாம். அதைக் காரணமாக வைத்து தேர்வை தள்ளிப் போட முடியாது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. lot of teachers waiting for promotion. lot of vacancies in hm post too. exam is not a solution. judges said 2 years without pass quit his job. same if judges write now any exams without pass quit his job?>

    ReplyDelete
  2. மக்களுக்காக சட்டமா? சட்டத்திற்காக மக்களா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி