மாநில கல்விக் கொள்கை அடிப்படையிலான புதிய வரைவு பாடத்திட்டம் டிசம்பரில் தயாராகும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-ன்படி, தற்போதைய பாடத்திட்டங்களை மாற்றியமைத்து புதிய பாடத்திட்டங்களை உருவாக்க, அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உட்பட 13 பேர் உள்ளனர்.
அதேபோல, பள்ளிக்கல்விக்கு புதிய கலைத்திட்டத்தை வடிவமைக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் பாடத்திட்ட வடிவமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பஞ்சாப் மொஹாலி இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், வரலாறு மற்றும் தொல்லியல் வல்லுநர் கா.ராஜன் உட்பட 14 பேர் உள்ளனர்.
இந்நிலையில், உயர்நிலைக் குழு, கலைத்திட்ட வடிவமைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் தலைமை வகித்தார். உயர்நிலைக் குழு துணைத் தலைவரான பள்ளிக்கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன் மற்றும் நிதித் துறை செயலர் உதயச்சந்திரன், கலைத்திட்ட வடிவமைப்புக் குழு தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், இஸ்ரோ தலைவர் நாராயணன், மாநில திட்டக்குழு உறுப்பினரும், மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் - செயலருமான இரா.சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் லதா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், இந்திய கணித அறிவியல் நிறுவன முன்னாள் பேராசிரியர் இரா.ராமானுஜம், அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழக மூலக்கூறு வரைகலை, கணக்கீட்டு வளமைய இயக்குநர் விஞ்ஞானி ஏ.இரா.அழகியசிங்கம், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இணைய வழி யாக பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: மாணவர்களுக்கு தியரியைவிட செய்முறை பாடம் அதிகம் இருக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது. மாணவர்கள் வெறுமனே பாடங்களை மனப்பாடம் செய்யாமல், நன்கு புரிந்து படித்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மதிப்பீடு அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
புதிய பாடத்திட்டத்தை ஒன்றாக செயல்படுத்தாமல், முதலில் 1, 2, 3-ம் வகுப்புகள், அடுத்து 4 முதல் 10, பின்னர் பிளஸ் 1, பிளஸ் 2 என படிப்படியாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகால வளர்ச்சி, ஏஐ உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். இதற்கான வரைவு பாடத்திட்டம் டிசம்பரில் தயாராகும். இவ்வாறு கூறினார்.
இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறும்போது, “புதிய பாடத்திட்டத்தை உருவாக்க தமிழக அரசு எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது. மாணவர்கள் படிப்பில் மட்டுன்றி கலை, விளையாட்டு, வாழ்வியல் திறன், தகவல் தொடர்புத் திறன், விருந்தோம்பல், சகிப்புத்தன்மை என அனைத்திலும் சிறந்து விளங்கும் கல்வி வேண்டும்” என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி