அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட பட்டியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2025

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட பட்டியல்

 

தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கான பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு நிதியுதவி வழங்குவது முதல் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்துவது வரை பல திட்டங்களின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்.


அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை


அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாகச் செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்துடன் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளின் உயர்கல்விச் செலவினத்திற்கான உதவித் தொகை ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டு, 2023-24 ஆம் ஆண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான 28 மாணவ, மாணவியர்களுக்குக் கல்வி உதவித் தொகையாக ரூ.12,95,000/- வழங்கப்பட்டது.


ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம்


ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென, தலா ரூபாய் 1,50,000/- ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 38 மாவட்டத்திற்கும் ஆசிரியர் நல நிதியிலிருந்து ரூபாய் 57 இலட்சம் அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்களுக்குக் கைக்கணினிகள்


79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கைக்கணினிகள் (Tablet) வழங்கப்பட்டுள்ளன.


97 வட்டாரக் கல்வி அலுவலர்கள் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்


2021-22 ஆம் ஆண்டில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு இணைய வழியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2023-24 ஆம் ஆண்டில் 33 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்குக் கணினி வழியாக போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, 3,043 முதுகலை ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுப் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வு


ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கான தேர்வுகள் இணையவழியில் 14.10.2022 முதல் 19.10.2022 வரை நடத்தப்பட்டு, 21543 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர்; தாள் 2-க்கான கணினி வழித் தேர்வுகள் 3.2.2023 முதல் 15.02.2023 வரை நடத்தப்பட்டு, அதில் 16090 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களின் மறுபிரதி சான்றிதழ்கள் 17.7.2023 முதல் இணைய வழியில் இ-சேவை மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2025 வரை 9113 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.


3192 பட்டதாரி ஆசிரியர் / வட்டார வள் மைய பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணிநாடுநர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு 4.2.2024 அன்று நடத்தப்பட்டு, தகுதியான பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2,768 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்குப் பணிநாடுநர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வு 21.7.2024 அன்று நடத்தப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் மாதத்திலும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைப்பெற்றுள்ளது.


கல்விச் சுற்றுலா


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்திட உலக அளவிலும், தேசிய / மாநில அளவில் புகழ்பெற்ற இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஆண்டு தோறும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தார்கள்.


இத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங், ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 2024-25 ஆம் கல்வியாண்டில் கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 52 ஆசிரியர்கள் 23.10.2024 முதல் 28.10.2024 வரை பிரான்சு நாட்டிற்குச் சர்வதேசக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். 325 ஆசிரியர்கள் டேராடூனுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.


கணினி அறிவியல் பாட தனிக் கட்டணம் ரத்து


2022-23 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாகப் பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தனிக் கட்டணம் ரூ.200/- இரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் ஏறத்தாழ 3.5 இலட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.


தரமுயர்த்தப்பட்டுள்ள பள்ளிகள்


மாணவர்களின் நலனுக்காக 2023-24 ஆம் கல்வியாண்டில், 4 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 6 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. 4,989 இடைநிலை ஆசிரியர், 5,154 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்யப்பட்டனர்.


பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்


பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்திட உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் 2022-23 மற்றும் 2023-24ஆம் கல்வியாண்டுகளில் 614 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.1087.76 கோடியும், 2,455 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2,455 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், 391 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 2024-25 ஆம் கல்வியாண்டில் 440 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூ.745.27 கோடியும், பராமரிப்புப் பணிகளுக்கென ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 526 ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.284 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


வானவில் மன்றம்


அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றில் ஆர்வத்தையும் திறனையும் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் ஆய்வகத் திட்டம் (வானவில் மன்றம்) ரூ.11.69 கோடி செலவில் 33.50 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


பேராசிரியர் அன்பழகன் விருது


கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி எனப் பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கும் திட்டம் 2023-24 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி