இனியும் ஏமாற்ற நினைக்காதீர்கள்? - எழுத்தாளர் மணி கணேசன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2025

இனியும் ஏமாற்ற நினைக்காதீர்கள்? - எழுத்தாளர் மணி கணேசன்

நுணலும் தன் வாயால் கெடும் என்று ஊரில் ஒரு வழக்கு உண்டு. அதுபோல, அன்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்கு வங்கியைக் குறிவைத்து அள்ளி வீசிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்களும் ஆசிரியர் பெருமக்களும் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் எதுவும் நியாயத்திற்கு புறம்பானவை அல்ல என்பதை ஆட்சியாளர்களும் பொதுமக்களும் உணர வேண்டிய தருணம் இது. ஓய்வுக்கால வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் திரிசங்கு சொர்க்கத்தில் உள்ள புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏப்ரல் 1, 2003 முதற்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று முன்வைக்கும் தலையாய கோரிக்கையை எளிதில் புறந்தள்ளி விடமுடியாது. 

ஏனெனில், 60 வயதைக் கடந்த ஓர் அரசு ஊழியரும் ஆசிரியரும் தம் பணி ஓய்வுக்குப் பின்னர் கண்ணியமான, பல்வேறு உடல் உபாதைகளுடன் அதிக மருத்துவ செலவுகளுடனும் போராடினாலும் நம்பிக்கை தளராமல் யாரிடமும் கையேந்தி நிற்காமல் தம் இறுதிக் காலங்களை மகிழ்வோடு கழிக்க வேண்டிய வாழ்க்கையை அளிப்பது ஒவ்வோர் அரசின் இன்றியமையாத கடமை ஆகும்.

இன்றைய சூழலில் சரிபாதிக்கும் மேலாக இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் தான் பல்வேறு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் உள்ளனர். ஒவ்வொரு வங்கியும் கூவிக் கூவி ஒவ்வொரு ஆளையும் நிரந்தர கடனாளியாக்கி வயிறு கொழுக்கும் வங்கிகள் சேமிப்பு வட்டியை வெகுவாகக் குறைத்துள்ளது எண்ணத்தக்கது. ஒரேயடியாகக் கைகழுவிக் கொடுக்கப்படும் பணிநிறைவுக் காலப் பணப்பலன்களை, முன்பே வாங்கிக் குவித்து வைத்துள்ள கடன்கள் எல்லாம் அடைத்ததில் கிடைக்கும் எஞ்சியவற்றில் எந்தவோர் ஆகாயக் கோட்டையும் இன்றைய காலகட்டத்தில் கட்டிவிட முடியாது என்பது தான் உண்மை. எனவேதான் மீண்டும் வேண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

அதுபோல, அனைத்து நிலைகளிலும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பது குருதி சிந்தி, உயிர் நீத்து, சிறைக்கொட்டடியில் வாடி, போராடிப் பெற்ற உரிமையாகும். எந்தவோர் ஆட்சியாளரும் சும்மா தூக்கிக் கொடுத்து விடவில்லை என்பதை இக்கால இளைய சமுதாயம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆக, மத்திய அரசுக்கு இணையான மாநில அரசின் சம வேலைக்குச் சம ஊதியம் என்பது ஊழியர் உரிமை ஆகும். அதில் பகுதியளவு என்பது சரியானதல்ல. இது முதலைக் கண்ணீரைக் கண்டு ஏமாறும் துயர நிலையாகும். யாசகம் கேட்கவில்லை! உரிமையைக் கேட்பதில் சமரசம் என்பது அபாயகரமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. 

இத்தகைய அவல நிலையை 2009 க்குப் பின்னர் இடைநிலை ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ள பல்லாயிரம் இளைய சமுதாயம் கண்முன்னே தம் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறாமல் அரசின் சூழ்ச்சிகளால் ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு வைத்த 1.86 விதி என்பது இருவருக்கும் இழைத்த மாபெரும் அநீதியாகும். அடிப்படை ஊதியம் 9300 தர ஊதியம் 4200 ஐ நியாயமாகப் பெற வேண்டியவர்களை, முறையான உயர் கல்வித் தகுதிகளைக் கணக்கில் கொள்ளாமல் பட்டயப் படிப்பு அல்லாத கடைநிலை ஊழியர்கள் பெறும் 5200 + 2800 க்குத் தரமிறக்கி வைத்தது கேட்டிலும் பெரும் கேடாகத் தற்போது வரை தொடர்ந்து வருவது வருந்தத்தக்க ஒன்றாகும். பாதிக்கப்பட்ட இருவரும் தம் நிலை உணராமல், 'எனக்கு இரண்டு கண் ; உனக்கு ஒரு கண் தானே போயுள்ளது' என்று நியாயம் கற்பிப்பதை என்னவென்று சொல்வது? 

இந்த ஊழியர் விரோத, துரோக, அநீதிக்குள் ஒரு சிலர் குளிர் காய்வது என்பது வெட்கக்கேடு! உப்பை விழுங்கியோர் தண்ணீர் குடித்தாக வேண்டிய காலக்கட்டாயம் தற்போது நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. சம வேலைக்குச் சம ஊதியம் என்பதற்கு தீர்வு புழு போன்று நகராது நெளியும் பயனற்ற குழு அல்ல. பறித்தவர்கள் தாம் கொடுக்க வேண்டும். அதற்கு ஒரு துளி மை மட்டும் போதும்!

தவிர, கடையாணி இல்லாமல் குத்துமதிப்பாக ஓடும் வண்டியாக அண்மைக்காலப் பள்ளி இருப்பது வேதனைக்குரியது. அதாவது தலைமையாசிரியர் பணியிடங்கள் முறையாக நிரப்பப்படாமல் தமிழ்நாட்டில் எண்ணற்ற உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கி தொடக்கப்பள்ளிகள் முடிய காணப்படுவது என்பது கல்வியின் சாபக்கேடு. துரதிர்ஷ்டவசமானதும் கூட. காரணங்கள் ஆயிரங்கள் அடுக்கடுக்காகச் சொன்னாலும் ஒரு நல்ல தாயைப் போல் விளங்கும் தலைமையாசிரியர் உரிய, உகந்த காலத்தில் கிடைக்கப்பெறாத ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை பெற்றோர்களின் பள்ளிப் பிள்ளைகள் தாம் பாவப்பட்ட பிறவிகள்! ஈடாக எத்தனை பேர் தற்காலிகமாக வந்தாலும் தமக்கே உரித்தான பெற்ற தாய்க்கு யாரும் ஒப்பாக மாட்டார்கள் என்பது குழந்தைகளின் உளக்கருத்தாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுகள் நடைபெறாமல் இருப்பது என்பது கல்வி வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாகும். அதற்கேற்ப ஒரு கருப்பு அரசாணை ஒன்றை வெளியிட்டு நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி நிரந்தரமாக முடக்கி வைத்துள்ளதை என்னவென்று சொல்வது? 

இதில் கொடுமை என்னவென்றால் ஆளே இல்லாத கடையில் மாங்கு மாங்குவென்று தேநீர் ஆற்றுவது போல அதிகாரிகள் பணி நியமனமும் பதவி உயர்வும் தொய்வில்லாமல் நடந்து வருவது நகைப்பிற்குரியதாக உள்ளது. காலிப் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப் பெற்றது என்பது ஆளற்ற வகுப்பறையில் பேருக்கு மற்றுமொரு ஆள் என்பதாக இருக்குமே தவிர அது நிரந்தர, பொறுப்புள்ள தலைமை / ஆசிரியர் இடத்தை நிரப்பும் என்று சொல்ல முடியாது.

வழக்கமான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு என்று முறையான அனைத்துக் கல்வித் தகுதிகளும் கொண்ட ஆசிரியர் பெருமக்களை மனதளவில் நொறுக்கி தேர்வுகள் அதனைத் தொடர்ந்து வழக்குகள் என ஆடுபுலி ஆட்டம் நடத்தப்பட்டாலும் ஒரு பயனும் இங்கு எந்தவொரு தரப்புக்கும் விளையப் போவதில்லை என்பதே கசப்பான உண்மை. 

இப்படியாக, ஊக்க ஊதிய உயர்வுகள் நிறுத்தி வைப்பு, பல்வேறு குளறுபடிகள் நிரம்பிய தணிக்கைத் தடைகள், கிடப்பில் கிடக்கும் ஆசிரியர் பணிப்பாதுகாப்புச் சட்டம் என கிணற்றில் போட்ட கற்குவியல்களாக எண்ணற்ற கோரிக்கைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. கடந்த ஆட்சியில் நிகழ்ந்ததைப் போல பல்வேறு வீரம் செறிந்த தொடர் போராட்டங்கள் எதுவும் தற்போது நடைபெற்றதாக அறிய முடியவில்லை. தூவானம் போல் எப்போதாவது நடக்கும். அல்லது முடங்கும். ஒத்திவைப்பு, பேச்சுவார்த்தை என நாடகம் அரங்கேற்றப்பட்டு அடங்கும். 

இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் இச்சூழலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 2021 இல் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படாமல் இன்றளவும் அப்படியே காணப்படுவதாக ஆசிரியர்கள் மனம் வெதும்பி புலம்பி வருவது கண்கூடு. மேலும், தற்போது முன்பைவிட பணி சார்ந்த புதிய புதிய சிக்கல்கள் பல்வேறு வடிவங்களில் வெகுவாக கூடியுள்ளதையும் கவனத்தில் கொள்வது நல்லது. தவறான வழிகாட்டுதல்களால் அவ்வப்போது நடைபெறும் வெற்றுக் கோலாகல கொண்டாட்டங்களால் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டாலும் நிராசையையும் அவநம்பிக்கையையும் அவற்றினால் உண்டான காயங்களும் ஆறாத புண்ணிலிருந்து வடுவாக மாறுவதற்குள் தக்க தீவிர சிகிச்சை அளிப்பது என்பது அவசர அவசியமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் தாய்ப்பால் தருவதற்கும் விதைநெல் வாங்கி வழங்குவதற்கும் நட்டக் கணக்குப் பார்ப்பதைக் கைவிடுதல் நல்லது. ஏமாந்தது போதும்! இனியும் ஏமாற்ற நினைக்காதீர்கள்?

எழுத்தாளர் மணி கணேசன் 


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி