ஆசிரியர் பணித் தகுதிக்கான டெட் தேர்வின் 2 வினாத்தாள்களும் எளிமையாக இருந்ததால் இந்த முறை தேர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பட்டதாரிகள் கருத்து தெரிவித்தனர்.
இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், 2025-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஆர்பி கடந்த ஆக.11-ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கிடையே பணியிலுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும், டெட் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்.1-ம் தேதி உத்தரவிட்டது. இதன் காரணமாக டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அதன்படி டெட் முதல் தாள் தேர்வுக்கு, 1 லட்சத்து 7,370 பேரும் 2-ம் தாள்தேர்வுக்கு 3 லட்சத்து 73,438 பேரும் என மொத்தம் 4 லட்சத்து 80,808 பேர் விண்ணப்பித்தனர்.
இவர்களில் தகுதியானவர்களுக்கான ஹால்டிக்கெட் நவ.3-ம் தேதி வெளியானது. தொடர்ந்து நடப்பாண்டுக்கான டெட் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க நாளில் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 92,412 (86%) பேர் எழுதினர். 14,958 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து பட்டதாரி ஆசிரியருக்கான டெட் 2-ம் தாள்தேர்வு மாநிலம் முழுவதும் 1,241 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர். மையத்துக்குள் தேர்வர்கள் பலத்த சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே முதல் தாள் போல் 2-ம் தாள் தேர்வும் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் இந்த முறை டெட் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவ்விரு தேர்வுகளின் முடிவுகளை துரிதமாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
kindly reduce eligibilithy cut off marks
ReplyDelete