சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் நேற்று 18-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கடந்த 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
வெவ்வேறு இடங்களில்... இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது.
கல்வித் துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம், கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
17-வது நாளான நேற்று முன்தினம் (ஞாயிறு) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இந்நிலையில் 18-வது நாளான நேற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.
‘சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், திமுக அரசே! தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்று, ஊதிய உயர்வு கேட்கவில்லை, உரிய ஊதியம்தான் கேட்கிறோம்’ என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

kindly government give respect to teachers and solve as soon.
ReplyDelete