சட்டசபை தேர்தலை விரைவாக நடத்த, தேர்தல் கமிஷன் திட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2026

சட்டசபை தேர்தலை விரைவாக நடத்த, தேர்தல் கமிஷன் திட்டம்!

 

சட்டசபை தேர்தலை விரைவாக நடத்த, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது

தமிழக சட்டசபை தேர்தலை, வரும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அடுத்த மாதம் ஆலோசனை நடத்திய பின், அம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. தமிழக சட்டசபைக்கு, கடந்த 2021ம் ஆண்டு ஏப்., 6ல் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. தி.மு.க., அரசின் பதவி காலம், வரும் மே 10ம் தேதி நிறைவடைய உள்ளது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கத்திலும், அம்மாநில அரசுகளின் பதவி காலம் நிறைவடைய உள்ளது. எனவே, ஐந்து மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. இம்மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிச., 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்தல் பணி

தற்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, வரும் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று வரை, 12 லட்சத்து 17,913 பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பிப்., 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நிய மிக்கப்பட்டு உள்ளனர். தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் துவக்கியதுபோல், அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன், ஆளும் கட்சியான தி.மு.க., தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது. கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைத்து, தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., ஆகியவை இணைந்து, தனி கூட்டணி அமைத்துள்ளன. மேலும் சில கட்சிகளை இணைத்து, தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.,வும் தயாராகி வருகிறது. நாம் தமிழர் கட்சி மட்டும், தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. புதிதாக துவக்கப்பட்ட த.வெ.க., தனி அணி அமைக்க முயற்சித்து வருகிறது. இச்சூழலில், சட்டசபை தேர்தலை விரைவாக நடத்த, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

ஆலோசனை

தலைமை தேர்தல் கமிஷனர், அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில், தமிழகம் வர உள்ளார். அவரது தலைமையிலான குழுவினர், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இவ்வாறு, ஐந்து மாநிலங்களுக்கும் சென்று ஆலோசனை நடத்திய பின், பிப்ரவரி கடைசி வாரத்தில், தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. கடந்த முறைபோல், இந்த முறையும் ஒரே கட்டமாக, ஏப்., 10க்குள் தமிழகம் மற்றும் புதுச் சேரிக்கு, சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி