தேர்வு முடிவுகளை ரத்து செய்தது உ.பி., தேர்வாணையம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2013

தேர்வு முடிவுகளை ரத்து செய்தது உ.பி., தேர்வாணையம்.

சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில், வெளியிடப்பட்ட தேர்வுகளின் முடிவுகளை, உத்தர பிரதேச மாநில, அரசுபணியாளர் தேர்வாணையம், நேற்று ரத்து செய்தது. அதனால், இடஒதுக்கீட்டிற்கு ஆதரவானவர்கள், வன்முறையில் ஈடுபட்டனர்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அரசு உள்ளது. இந்த அரசு, புதிதாக இடஒதுக்கீடு கொள்கை ஒன்றை அமல்படுத்தியது. அதாவது, உ.பி., மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், முதனிலை தேர்வு அளவிலேயே, இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்றுவது என்பதே அந்த முடிவு.இதையடுத்து, அரசு பணியாளர் தேர்வாணையமும், இந்த இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்றி, அதனடிப்படையில், சமீபத்தில், சில தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டது. இதற்கிடையில், அகிலேஷ் அரசின், புதிய இடஒதுக்கீடு கொள்கையை எதிர்த்து, அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், அதன் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.அதே நேரத்தில், தீர்ப்பு வெளியாகும் வரை, எந்தப் பதவிகளுக்கும், நேர்முகத் தேர்வையும் நடத்தக் கூடாது என, உ.பி., அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டனர். அத்துடன், சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு கொள்கையை, உடனே அமல்படுத்திய தேர்வாணையத்திற்கும், கண்டனம் தெரிவித்தனர்.ஐகோர்ட்டின் கண்டனத்தை அடுத்து, முதனிலை தேர்வு அளவிலேயே, இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்றும் முடிவை, உ.பி., அரசு பணியாளர்தேர்வாணையம், நேற்று முன்தினம் வாபஸ் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, புதிய இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில், ஏற்கனவே வெளியிடப்பட்ட அனைத்து தேர்வு முடிவுகளையும், நேற்று ரத்து செய்தது.தேர்வாணையத்தின் இந்த முடிவுக்கு, இடஒதுக்கீடு ஆதரவாளர்கள், எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நேற்று அவர்கள், மாநிலத்தில் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையின் போது, சமாஜ்வாதி மாவட்ட தலைவர் ஒருவரின் வீடும் அடித்து நொறுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி