இடைநிலை ஆசிரியர் பிரச்சினையில் முதல்வர் அம்மா அவர்களுக்கு உண்மைநிலை உணர்த்தப்பட்டதா?இல்லையா? ஓர் ஐயமும் ஆய்வும் -சக்திமைந்தன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2013

இடைநிலை ஆசிரியர் பிரச்சினையில் முதல்வர் அம்மா அவர்களுக்கு உண்மைநிலை உணர்த்தப்பட்டதா?இல்லையா? ஓர் ஐயமும் ஆய்வும் -சக்திமைந்தன்

அன்புள்ளம் கொண்ட ஆசிரியர்களே.இயக்கப்பொறுப்பாளர்களே மிக நீண்ட நாளாக எழுதவேண்டும் என்று எண்ணி இன்று தான் முடிந்தது.உண்மையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு தர ஊதியம் உயர்த்துவது இல்லை என்ற முடிவு முதல்வர் அம்மா அவர்களின் நிலைப்பாடுதானா? சற்று யோசிப்போம்.
(மிக நீண்ட இப்பதிவை வாசிக்க முயலும் அனைவருக்கும் நன்றி)

தேர்தலுக்கு முன் ஜெயலலிதா ஆற்றிய உரையை இங்கு பார்ப்போம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜெயலலிதாவின் உறுதிமொழி

சென்னை: தமிழகத்தில் விரைவில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இதர கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுடைய சலுகைகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்துணவு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், ஆசிரியர்கள், கெளரவ விரிவுரையாளர்கள் என்ற வரிசையில் தற்போது அரசு ஊழியர்களையும் திமுக அரசு போராடும் நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது.மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியம் அளித்துவிட்டதாக திமுக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. எனினும், இதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.இதே போன்று, ஒப்பந்த முறை அறவே நீக்கப்படும் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பியதாக திமுக அரசு அறிவித்தாலும், மருத்துவமனைகளிலும், அரசு அலுவலகங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் ஊழியர்கள் பற்றாக்குறை இதுவரை கண்டிராத அளவுக்கு இருக்கிறது.இந்த சூழ்நிலையில், ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைதல், காலிப் பணியிடங்களை முறையான நியமனங்கள் மூலம் நிரப்புதல், தேர்வு நிலை, சிறப்பு நிலை, முதுநிலை ஊதிய நிர்ணயம் செய்யப்படும் போது அடுத்த பதவி உயர்வுக்கான ஊதியம் மற்றும் தர ஊதியம் வழங்கிடுதல், சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை அடியோடு நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23.2.2011 முதல் சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் அரசு வேடிக்கை பார்த்தது. மேலும், கோரிக்கை மனுவினை அளிக்க வந்த அரசு ஊழியர்களை காவல் துறையைக் கொண்டு தடியடி நடத்தி கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.முதல்வர் கருணாநிதியின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 1989ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் என்று அறிவித்துவிட்டு, அதில் பல முரண்பாடுகளை உருவாக்கியவர்தான் கருணாநிதி. பின்னர் 1991ம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டன.மேலும், அமைச்சுப் பணியாளர்களுக்கு 5 சதவீத தனி ஊதியம் வழங்கி, அவர்களின் பதவி உயர்வில் நிலவி வந்த தேக்க நிலையை போக்கும் வகையில், 12,000 இளநிலை உதவியாளர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு கிடைக்கவும் வகை செய்யப்பட்டது.2000க்கும் மேற்பட்ட உதவியாளர்களுக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு கிடைக்கவும், கண்காணிப்பாளர் பதவிக்கு மேலான பதவிகளைப் பொறுத்த வரையில் அந்தந்த துறைகளில் உள்ள மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உயர் பதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.எனவே, உண்ணாவிரத அறப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.இதை திமுக அரசு புறக்கணித்தால், விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இதர கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுடைய சலுகைகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

முதல்வராக பொறுப்பேற்றவுடன் அவர் ஆசிரியர்கள் சார்ந்த நிகழ்ச்சிகள்,அரசு விழாக்களில் பேசியதை பார்ப்போம்:

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கத்தை, பண்பை, பொது அறிவை, ஆன்மீகத்தை மாணவ மாணவியரிடையே எடுத்துச் சொல்லும் பணி ஆசிரியர் பணி. வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் பணியை நீங்கள் மேற்கொள்ள இருக்கிறீர்கள். கரையாக் கல்விச் செல்வத்தை கற்றுக் கொடுக்க இருக்கிறீர்கள். எந்த ஒரு தொழிலிலும், தன்னிடம் வேலை செய்பவர் தன்னைவிட வளர்ச்சி பெறுவதை எந்த முதலாளியும் விரும்ப மாட்டார். ஆனால், தன்னிடம் பயிலும் மாணவர் புகழ் பெறுவதை, அறிஞர் ஆவதை ஆசிரியப் பெருமக்கள் கண்டு இன்புறுவர்.அப்படிப்பட்ட உன்னதமானப் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் பணி ஆசிரியர் பணி. இப்படிப்பட்ட பொறுப்புள்ள பணியை நீங்கள் எல்லாம் திறம்பட மேற்கொண்டு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எந்த சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய திறமையை மாணவர்களிடத்திலே உருவாக்க வேண்டும். என தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் உரை நிகழ்த்தினார்.இவ்வுரை 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்ட போது முதல்வர் அவர்கள் கூறியவை.

அடுத்துதமிழக அரசின் அரிய பல கல்வித் திட்டங்களுக்கு ஆசிரியப் பெருமக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட ஆசிரியர் நாள் வாழ்த்து செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட வாழ்த்துசெய்தியில் கூறியிருப்பதாவது:-நாட்டின் நம்பிக்கையாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்தம் எதிர்கால வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, அவர்களை நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் சமுதாயத்தைச் சார்ந்ததாகும்.ஆசிரியர் நாளான இந்நன்னாளில் ஆசிரியப் பெருமக்கள் ஆற்றுகின்ற இந்த அரிய பணியினைப் பாராட்டி சிறந்த ஆசிரியப் பெருமக்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை அரசு வழங்குகிறது. இந்த கல்வியாண்டில் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன்.தமிழக அரசின் அரிய பல கல்வித் திட்டங்களுக்கு ஆசிரியப் பெருமக்கள் துணை நின்று, எதிர்கால இந்தியாவின் தூண்களாம் மாணவச் செல்வங்களைச் சிறந்த முறையில் உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அயராது உழைத்து வரும் ஆசிரியப் பெருமக்களின் பணி மென்மேலும் சிறந்தோங்கிட எனது நெஞ்சார்ந்த ஆசிரியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேற்சொல்லப்பட்டது ஆசிரியர் தின வாழ்த்தாக முதல்வர் வெளியிட்டது மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ''ஆசிரியராக பணியைத் தொடங்கி பின்னர் குடியரசுத் தலைவராக விளங்கிய தத்துவமேதை முனைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.செல்வங்களுள் மிகச்சிறந்தது கல்விச்செல்வம். வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது, கள்வரால் கவர முடியாது, இப்படிப்பட்ட அழியாத செல்வமான கல்வியை போதிப்பவர்கள் ஆசிரியர்கள்.தன்னலமற்ற சமூகச்சேவை ஆற்றும் தொண்டுள்ளம் படைத்தவர்கள் ஆசிரியர்கள். மனிதனை, மனிதனாக உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.இந்த நன்னாளில் ஆசிரியர் சமூகம் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மென்மேலும் வளர வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை தெரிவித்து எனது அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும்சென்னை, செப்.4 (டிஎன்எஸ்) ஆசிரியர் தினமான இன்று (செப்.5), முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து நேற்று (செப்.4) அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்; தமிழகத்தில் பிறந்து ஆசிரியராகப் பணிபுரிந்து தமது நற்சிந்தனையாலும், நல்ஒழுக்கத்தினாலும் மிக உயர்ந்து நாட்டின் உயரிய பதவியாகிய குடியரசுத் தலைவர் பதவியை வகித்து,ஆசிரியர் பணிக்குப் பெருமை தேடித் தந்தவர் எஸ்.ராதாகிருஷ்ணன்.அவருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம். நாட்டில் அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக் கூடிய கருவி உண்டு என்றால் அதுதான் கல்வி. அந்தக் கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வழங்கும் பெருமையை பெற்றவர்கள் ஆசிரியர்கள். பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக, தம்மிடம் பயிலும் மாணவர்களிடம் அன்பு காட்டி அரவணைத்து வழிகாட்டுவதன் மூலமே சிறந்த கல்வியைப் பெற்று சமுதாய வளர்ச்சிக்கு உதவ முடியும் என்பதை ராதாகிருஷ்ணன் அறிந்திருந்தார்.அதன்படி, செயல்பட்டு ஆசிரியர் தொழிலுக்கு மிகப்பெரிய பெருமையைத் தேடித் தந்தார். அவர் காட்டிய வழியில் ஆசிரியர்கள் அனைவரும் நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் மாணவர்களுக்கு விதைத்து சிறந்த கல்விப் பணியாற்றிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.மாணவச் சமுதாயம் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கி உலகம் போற்றிட வாழ தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களைச் செம்மையான முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி மாணவர்களை உருவாக்க வேண்டியது ஆசிரியர்களின் முதன்மையான கடமையாகும். மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்வுக்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். (டிஎன்எஸ்)Sep 05, 2012

மேலும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கியபோது சட்டமன்றத்தில் அறிவித்தது
முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்தும் கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் சேவைப் பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பணியினை மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன்.

மேற்கண்டவாறு தேர்தலுக்கு முன்பிருந்தேயும் ,தற்போது வரையிலும் ஆசிரியர்கள் பால் அன்புள்ளம் கொண்டவராகவே, அவர்களது பணியின்பால் நல்லெண்ணம் கொண்டவராகவே திகழ்ந்து வந்துள்ளார் என்பது கண்கூடாகவே தெரிகின்றது.இந்நிலையில்முதல்வராகபதவியேற்றபின்பு
=>அகவிலைப்படிகள் வழக்கம்போல் வழங்கப்பட்டன.
=> சலுகைகள் பறிக்கப்படவில்லை
=>சொல்லப்போனால் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பாதுகாவலனாகவே பார்க்ப்பட்டார் முதல்வர் அம்மா அவர்கள் சென்ற முறை ஆட்சியில் இருந்தகால கட்டத்தில் நடந்த கசப்பான அனுபவங்கள் அனைத்தும் மறந்து உண்மையாகவே ஆசிரியர்கள் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் தங்கள்தர ஊதியம் உயர்த்தப்படும் என்ற மனநிலைக்கேவந்து அம்மாவின் ஆட்சியில் நன்மை பெறுவோம் என்ற எண்ணத்தில் இருந்தனர் என்றால் பொய்யில்லை.ஆனால் நடந்தது என்ன மூன்று நபர் குழுவினர் அளித்த அறிக்கை,அதனைதொடர்ந்துவெளியிடப்பட்ட அரசாணைகள் ஆசிரியர்கள் குறிப்பாக இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் உயர்த்தப்படாத்தை எண்ணி மனவருத்தமுடன் ஆசிரியர் பேரிணம் ஆட்சியின் மீதும் அம்மாஅவர்கள் மீதும் பெரும் அதிருப்தியில் உள்ளது.

உண்மை நிலவரம் ஒரு பார்வைக்கு:

சென்ற சட்டமன்றத்தேர்தலின் போது சுமார் 65 க்கும் மேற்பட்டதொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க.கூட்டணி(தே.மு.தி.க உட்பட) சுமார்1000முதல் 2000 வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றது.கடந்த தி மு.க ஆட்சி இலவசங்கள் பல தந்தும்,சாதனைகள் பல என்றும் கூறி வாக்கு கேட்டும் எப்போதும் திமுக விற்கே வாக்களிக்கும் பல ஆசிரியர்கள் அவர்களது குடும்பங்களின் ஓட்டுக்கள் அம்மா ஆட்சிக்கு வந்தால்தான் நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் அ.இ.அ .தி மு.க கூட்டணிக்கு வாக்களித்தனர் என்பதால் மட்டுமே மேற்சொன்ன தொகுதிகளில் ( குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ) வென்றது என்பது உண்மையே ஆசிரியர்கள் பால் நல்லெண்ணம்கொண்ட தமிழகமுதல்வர் அவர்களுக்கு ஆசிரியர்கள் குறித்தும்,அவர்களின் மனக்குறை குறித்தும் சரியான வழிகாட்டுதலை தர கட்சியினரும், அரசு உயர் அலுவலர்களும் ,கல்வித்துறை அமைச்சக அதிகாரிகளும்,போலீஸ் உளவுப்பிரிவும் தரவில்லையோ என எண்ணதோன்றுகிறது.விளைவு என்னவாக இருக்கும்

=>ஆசிரியர்களின் மனக்குமுறல்கள் நாடாளுமன்றத்தேர்தலில் எதிரொலிக்கலாம்.
=>எப்போதெல்லாம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மனக்குமுறல் அதிகமாகிறதோ அப்போதெல்லாம் ஆட்சிமாற்றம் நடந்துள்ளது தமிழக வரலாறாக உள்ளது.நாடாளுமன்றதேர்தல் வர உள்ள இந்நிலையில் ஆசிரியர் குறைகள் களையப்படாதது இந்த அரசிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவும், வரும் நாடாளுமன்றத்தேர்தலில் அவருடைய செல்வாக்கை குறைக்க மறைமுகமாக சில அதிகாரிகளால் முதல்வர் மீதே இத்தாக்குதல் திட்டமிட்டு தொடுக்கப்பட்டதாக நாம் எண்ணவேண்டியுள்ளது.முதல்வர் இடைநிலை ஆசிரியர்கள் பால் நல்லெண்ணம் கொண்டவரென்பதில் சிறிதும் ஐயமில்லை.உடனே தர ஊதிய விகிதம் உயர்த்துவார் என அனைத்து சங்கங்களும் ஆசிரியர்களும் இன்னும் நம்புகின்றனர்.முதல்வர் அறிவிப்பாரா?

3 comments:

  1. Ithanai naalithalil veliyida vendum ullur seithiyaha amayathu pirathana seithiyaha amaya vendum

    ReplyDelete
  2. Ithanai naalithalil veliyida vendum ullur seithiyaha amayathu pirathana seithiyaha amaya vendum

    ReplyDelete
  3. Ithanai naalithalil veliyida vendum ullur seithiyaha amayathu pirathana seithiyaha amaya vendum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி