652 கணினி ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களில் நிரப்ப உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2013

652 கணினி ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களில் நிரப்ப உத்தரவு.

தமிழகத்தில், பள்ளிகளில் உள்ள, கணினி ஆசிரியர் பணியிடங்களில், 2 மாதங்களில், 652 பேரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையை துவங்கி, கணிசமான பகுதியை முடிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட, கோர்ட் அவமதிப்பு மனுவை, நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஹேமா சம்பத்,வழக்கறிஞர் சி.உமா ஆஜராகினர். அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு அரசு பிளீடர் வேலுமணி ஆஜராகினர்.மனுவை விசாரித்த, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: வேலைவாய்ப்பக மூப்பு அடிப்படையிலும், பள்ளி கல்வித் துறையின் உத்தரவுகளின் அடிப்படையிலும், கணினி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை, உடனடியாக அரசு துவங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது.பள்ளி கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,"ஆசிரியர் தேர்வு வாரியம் தான், தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கணிசமான நேரம் வேண்டும். எப்படியும், ஆறு மாதம் தேவைப்படும்" என கூறப்பட்டுள்ளது.மனுதாரர் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், "845 பேரிடம், சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. எனவே, மீண்டும் ஒரு தேர்வு நடவடிக்கையை செய்ய முடியாது. எப்படி பார்த்தாலும், ஆறு மாத அவகாசம் தேவையில்லை" என்றார்.கூடுதல் அட்வகேட் ஜெனரல், "652, காலியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப வேண்டும். முதலில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து, ஒன்றுக்கு ஐந்து என்கிற விகிதத்தில், 3,500 பேர் அடங்கிய பட்டியல் பெறப்பட வேண்டும். மாநிலம் முழுவதிலும் இருந்து பட்டியல் பெற, கணிசமான நேரம் தேவை. தேர்வு நடவடிக்கைகளை முடிக்க, ஆறு மாதம் வழங்க வேண்டும்" என்றார்.எனவே, இந்த வழக்கை, ஆறு மாதங்களுக்கு தள்ளிவைக்க, நாங்கள் விரும்பவில்லை. தேர்வு நடவடிக்கைகளை உடனடியாக, அரசு துவங்க வேண்டும். இரண்டு மாதங்களில், கணிசமான பகுதியை முடிக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குப் பின், வழக்கை பட்டியலிட வேண்டும். அதற்குள், நடவடிக்கை அறிக்கையை, பள்ளி கல்வித் துறையின், முதன்மை செயலர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி