தமிழக அரசின் திட்டங்களுக்கு அர்னால்டு பாராட்டு: முதல்வருக்கு கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2014

தமிழக அரசின் திட்டங்களுக்கு அர்னால்டு பாராட்டு: முதல்வருக்கு கடிதம்

அனைத்து மகளிர் காவல் நிலையம், காற்றாலை மின் திட்டங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களுக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் கடிதம் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
"ஐ' பட ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க கடந்த 15-ஆம் தேதி சென்னை வந்திருந்த ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வாஸ்நேகர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல திட்டங்களுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார். இந்நிலையில், தமிழக முதல்வருக்கு அர்னால்டு அனுப்பியுள்ள கடிதம்:

நான் சென்னை வந்திருந்தபோது தங்களுடனான (முதல்வர்) சந்திப்பு மிகவும் மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களும், தாங்கள் கடந்து வந்த பாதைகளும் எனக்கு வியப்பளிப்பதாக உள்ளன. தமிழக மக்கள் அனைவரும் தங்களை "அம்மா' என்று அழைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் தாங்கள் வகுத்துள்ள திட்டங்கள் மிகச் சிறப்பானவை.

அனைத்து மகளிர் காவல் நிலையத் திட்டங்கள் போல் நான் எங்கும் கேள்விப்பட்டதில்லை. தமிழக அரசின் காற்றாலை மின் திட்டங்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திட்டங்கள் போன்ற யாவும் பாராட்டுக்குரியவை. காற்றாலை மூலம் மின் உற்பத்தி பெறுவது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விஷயம். அதுவும் இந்தியாவில் காற்றாலை உற்பத்தியில் 39 சதவீதம் தமிழகத்தின் பங்கு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு "ஆர் 20' என்ற நிறுவனத்தை நான் ஏற்படுத்தினேன். கால நிலை மாற்றம் ஏற்படும் நேரத்தில் சுத்தமான ஆற்றலை உருவாக்குவதற்காக 560-க்கும் மேற்பட்ட நகரங்களையும், மாகாணங்களையும் இந்த நிறுவனத்தின் மூலம் இணைத்து சில செயல்முறைகளைக் கையாண்டு வருகிறோம். இந்தத் திட்டத்தில் தமிழகமும் பங்கேற்க வேண்டும் என நினைக்கிறேன். இது குறித்த விவரங்களை, விரைவில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தைத் தொடர்புகொண்டு பேசுகிறேன்.

இது குறிப்பிட்ட மாநிலம் அல்லது மாகாணத்துக்கான வளர்ச்சிப் பாதை அல்ல; ஒட்டு மொத்த உலகுக்கும் வழிகாட்டும் நடைமுறை ஆகும். நான் கலிஃபோர்னியாவில் செய்ததை தாங்கள் தமிழகத்தில் செய்திருக்கிறீர்கள்.

இந்த திட்டத்தில் உங்கள் மாநிலமும் இணைவதன் மூலம் வாய்ப்புகளையும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளமுடியும். தங்களைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி. தாங்கள் வழக்கம் போல் உங்களைப் பணிகளைத் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம் என்று அந்தக் கடிதத்தில் அர்னால்டு தெரிவித்துள்ளார்.

இதே போல் "ஐ' படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில், சென்னைக்கு வர வாய்ப்பு ஏற்படுத்தித் தந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் அர்னால்டு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி