பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பியதில் இந்தியா தொடர் சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2014

பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பியதில் இந்தியா தொடர் சாதனை

விண்வெளி ஆராய்ச்சிக்காக பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வானில் செலுத்திய 27 முறையும் தொடர்ந்து இந்தியா வெற்றிபெற்று, சாதனை படைத்திருப்பதாக மகேந்திரகிரியில் உள்ள "இஸ்ரோ' அமைப்பின் மூத்த விஞ்ஞானி எஸ்.இங்கர்சால் பெருமையுடன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை விண்வெளிக் கண்காட்சி துவக்க விழாவில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியது: செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை முதல்முறையாக அனுப்பி உலக அளவில் இந்தியா சாதனை புரிந்திருக்கிறது. மங்கள்யான் செயற்கைக்கோளின் எடை 1350 கிலோ. செவ்வாய் கிரகத்தில் மீத்தேன், கால்சியம், மெக்னீசியம், தோரியம் போன்றவை எந்த அளவு உள்ளன. பரப்பளவு எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன மொத்தச் செலவு சுமார் ரூ.453 கோடி. இதில் செயற்கைக்கோளுக்காக மட்டும் ஆன செலவு சுமார் ரூ.153 கோடி. மங்கள்யான் நேரடியாக செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல முடியாது என்பதால், சூரியனை சுற்றித்தான் செல்ல வேண்டியது உள்ளது. இதன் தூரம் 66 கோடி கி.மீ. மங்கள்யானின் வெற்றி தொழில்நுட்பத்துக்கும், முறையாக கணிதம் கணித்தமைக்கும் கிடைத்த வெற்றி.

தொழில்நுட்பம், தொலை உணர்வு, இயற்கை வளங்களை அறிந்து கொள்ளுதல் போன்ற காரணங்களுக்காக 7 செயற்கைக்கோள்களை அனுப்ப "இஸ்ரோ' முடிவு செய்துள்ளது. இதுவரை 3 அனுப்பி விட்டோம். மேலும், 4 செயற்கைக்கோள்களை 6 மாதத்துக்குள் அனுப்பும் பணிகள் நடந்துவருகின்றன. எஸ்.ஆர்.இ. எனப்படும் ஆள் இல்லாத செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி, பூமியை சுற்றிவிட்டு திரும்பி வந்துள்ளது. கடந்த 2007இல் முதல்முறையாக ஆள் இல்லாத எஸ்.ஆர்.இ. விண்வெளி செயற்கைக்கோளை அனுப்பியதிலும், இந்தியாவுக்கு வெற்றியே கிடைத்தது. இந்த வெற்றியானது மனிதனையும் விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்ற நமது செயல்திறனைப் புரிந்துகொள்ள வைத்திருக்கிறது.

"இஸ்ரோ' முதல்முறையாக 1993இல் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ஐ.ஆர்.எஸ்.-1.-இ. என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. இது தோல்வியில் முடிந்தது. இந்த ஒன்றைத் தவிர, தொடர்ந்து 27 முறை தோல்வியே இல்லாமல் விண்ணில் ஏவப்பட்ட அனைத்து ராக்கெட்டுகளும் தொடர் வெற்றியைத் தந்து, அபார சாதனை புரிந்திருக்கிறோம்.

சந்திரன், செவ்வாய் கிரகங்களுக்கு செயற்கைக்கோளை அனுப்பி நாம் வெற்றி கண்டிருப்பதைப் போல, வியாழன் மற்றும் இன்ன பிற தொலைதூரத்தில் உள்ள கிரகங்களுக்கும் செயற்கைக்கோள்களை அனுப்புவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.

உலக அளவில் 6 நாடுகள் மட்டுமே விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலையில் இருந்தாலும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் மட்டுமே வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றன. பல்வேறு சாதனைகளை புரியும் "இஸ்ரோ' விஞ்ஞானிகள் தமிழகத்தில் கிராமங்களில் அரசுப் பள்ளிகளிலும், சாதாரண பொறியியல் கல்லூரிகளிலும் படித்தவர்களாகத்தான் பலரும் உள்ளனர். விண்வெளி ஆராய்ச்சித் தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு விளக்கவே விண்வெளிக் கண்காட்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். நாம் பல சாதனைகள் புரிந்து, நமது நாட்டுக்கு பெருமை சேர்ப்பவர்களாக மாற வேண்டும் என்றும் இங்கர்சால் கேட்டுக் கொண்டார்.

துவக்க விழாவில், இஸ்ரோ விஞ்ஞானிகள் நாகராஜன், ஆர்.எஸ்.கண்ணு, கல்லூரியின் செயலாளர் டாக்டர் சினனத்துரை அப்துல்லா ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி