7-வது ஊதியக் குழு குறித்த பரிந்துரைகள் 4 முதல் 5 மாதத்தில் அமல்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

7-வது ஊதியக் குழு குறித்த பரிந்துரைகள் 4 முதல் 5 மாதத்தில் அமல்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அதிகாரிகள் கொண்ட அலுவல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரைகள் 4 முதல் 5 மாதத்தில் அமல்படுத்தப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில்இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.வழக்கு விசாரணையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். அரசுத் தரப்பில், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார்.

'4 முதல் 5 மாதத்தில் அமல்'

வழக்கில் வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர், ''ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அதிகாரிகள் கொண்ட அலுவல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு செப்டம்பர் 30-க்குள் அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பிறகு 4 முதல் 5 மாதத்தில் பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகுபணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது. மத்திய அரசும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தையே ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் மேற்குவங்கம், திரிபுரா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும்பங்களிப்பு ஓய்வூதியமே அளிக்கப்படுகிறது.எனினும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் தலைமையில்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் நவம்பர் வரை பதவியில் இருப்பர். இதில் நிதி ஆதாரம், பொருளாதார சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் இதை அமல்படுத்த நீண்ட காலம் தேவைப்படும்.மத்திய அரசு அங்கன்வாடி ஊழியர்களுக்கு பகுதிநேரப் பணியைத்தான் வழங்குகிறது. அவர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தாம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7 முதல் ரூ.11 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக்க ஆவன செய்யப்பட்டு வருகிறது'' என்றார்.

'இடைக்கால நிவாரணம் வேண்டும்'

ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், ''7 வது ஊதியக் குழு குறித்து குழு அமைக்கப்பட்டு ஓராண்டியாகியும் அவற்றின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.இதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், ''இடைக்கால நிவாரணம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. குழுவின் பரிந்துரைகளைப் பொறுத்தே நிவாரணம் அமையும்.ஜாக்டோ- ஜியோவின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்து வருகிறது'' என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''7-வது ஊதியக் குழு குறித்த அறிக்கை பரிந்துரைக்கப்பட்ட பிறகு, அதை அமல்படுத்த எவ்வளவு நாட்கள் ஆகும்? பழைய ஓய்வூதிய அமல்படுத்த எவ்வளவு நாட்கள் ஆகும்? இதற்கு நீண்ட காலம் ஆகும் என்றால் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இக்கேள்விகளுக்கு மதியம் 2.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும்'' என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கின் பின்னணி

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசுஊழியர் சங்கங்கள் கூட்டு செயல் குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில், கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இருப்பினும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. இதனால் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு செப். 15-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் ஆஜராகி, நீதிமன்ற தடையாணைக்குப் பிறகும் வேலைநிறுத்தத்தை தொடர்ந்த காரணம் குறித்து விளக்கம் அளித்தனர்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மதித்து உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். அப்படிச் செய்தால் தலைமைச் செயலரை நீதிமன்றத்துக்கு வரவழைத்து உங்களது கோரிக்கையை கவனிக்க உத்தரவிடுவோம். மறுத்தால் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்று தெரியும் எனக் கடுமையாக எச்சரித்தனர். இதையடுத்து 9 நாட்களுக்குப் பிறகு வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்தி அன்று மதியமே அரசு அலுவலர்கள் பணிக்கு திரும்பினர்.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில்இன்று விசாரணைக்கு வந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி