கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2018

கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த ஆர்.குமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:மறவன் குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அனைத்து கட்சியினரும் கூட்டுறவுசங்கத்தில் உறுப்பினராகச் சேர்வதற்காக கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் இயக்குநர்களை சந்தித்தனர். ஆனால், புதிய உறுப்பினர்களை சேர்க்கவில்லை. அதே நேரத்தில் அதிமுகவைச் சேர்ந்தவர்களை முன்தேதியிட்டுஉறுப்பினர்களாகச் சேர்த்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் உள்ள 95 சதவீத உறுப்பினர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள். எனவே, சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட அதிமுகவினரை நீக்கவும், அனைத்துக் கட்சியினரையும் உறுப்பினர்களாக சேர்க்கக்கோரி கூட்டுறவு சங்கங்களின் சிறப்பு அலுவலர்களிடம் மனு அளித்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. இதன்படி பார்க்கும்போது, கூட்டுறவு சங்கத் தேர்தலும் முறையாக நடைபெற வாய்ப்பில்லை.எனவே, கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக மார்ச் 12 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, தேர்தல் நடத்த தடை விதித்தும், அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களையும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராகச் சேர்க்கவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமதுஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சில மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அவை தள்ளுபடியும் செய்யப்பட்டன என்றார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் முறையாக நடைபெற்று வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி