Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தாய்...............

ஒரு கணம் நில்லுங்கள்!
உங்களுக்கு அவரசம்தான்!!
நிறைய வேலை இருக்கிறது!!!
வெற்றியை நோக்கி ஓடுகிறீர்கள்!!!!
அது எங்களுக்கும் புரிகிறது!!!!!
ஆனாலும் இது போன்ற பகுதியைப் படியுங்கள் !!!!!!
அதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள் !!!!!!!
அது உங்களுக்கு நிச்சயம் வெற்றியைத் தேடி தரும்!!!!!!!!
ஆம்! சர்வ நிச்சயமாக வெற்றியைத் தேடி தரும்!!!!!!!!!

இதைப் படிக்கும் முன்னர் தனிமையில் உட்கார்ந்துப் படிக்கவும். ஏனெனில், கதையின் முடிவில் ஒருவேளை உங்களது கண்களிருந்து ஒரு துளி கண்ணீராவது வரலாம்.

        ஒரு பள்ளியின் மணி ஒலிக்கிறது.மாணவர்கள் வந்து வரிசையாக அமர்கிறார்கள்.அந்த நேரத்தில், ஒரு உருவம் அப்பள்ளிக்குள் நுழைகிறது.அந்த உருவத்திற்கு ஒரு கண் மட்டுமே. அதாவது ஒற்றைக் கண். அதனால் சற்று கோர உருவமாக காட்சியளித்தாள் அந்த ஏழைத் தாய்.

அந்த உருவத்தைப் பார்த்த மாத்திரத்தில் "அய்யோ பேய்!" என்று பள்ளி சிறுவர்கள் அலறுகிறார்கள்.ஒற்றைக்கண் ராட்சசி நம் பள்ளிக்கு வந்துவிட்டாள் என்று பேசிக்கொள்கிறார்கள், பயப்படுகிறார்கள்.

அப்பொழுது ஒரு மாணவன் அந்த உருவத்தை உற்று நோக்கிச் சொன்னான் "இது நம் வகுப்பில் படிக்கும் மணியோட அம்மா" என்று சொன்னான். அப்பொழுதுதான் மணி நிமிர்ந்து பார்க்கிறான். அந்த உருவம் காய்கனிகளை விற்று படிக்க வைக்கும்  தன் தாய் என்று மணிக்குத் தெரிகிறது.

ஏதோ ஒரு ஆசையில் தன் மகன் பள்ளியில்  படிப்பதைப் பார்க்க வந்திருந்தாள் அந்த ஏழைத்தாய். ஆனால் மணிக்கோ மிகப்பெரிய அவமானம், வெட்கம், வேதனை. இவ்வளவு பேர் மத்தியில் நம்முடைய அம்மா ஒற்றைக்கண் உருவம் வந்துவிட்டதே என்று!

அம்மாவைப் பார்த்து சொன்னான்."நீ எதற்குப் பள்ளிக்கு வந்தாய்? உன்னை அம்மா என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது,நீ இருப்பதை விட சாவதே மேல்" என்று சொன்னான்.அன்றிரவு இவனுக்கும் உறக்கமில்லை,அம்மாவிற்கும் உறக்கமில்லை. இருவருக்கும் இயலாமை ஏற்படுகிறது.இருக்கின்ற ஒரே ஒரு கண் வழியே அழுது கொண்டிருந்தாள் அந்தத்தாய்.

நாட்கள் உருண்டோடின. மணி வறுமையை எதிர்த்து நான்கு படித்தான். வட மாநிலத்தில் மிகப் பெரிய வேலையில் சேர்ந்தான். அங்கேயே திருமணமும் செய்து கொண்டான். மகளும் பிறந்தாள்.

ஒரு நாள் அவன் படித்த பள்ளியிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்திருந்தது. பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் கலந்து கொள்ளும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்திருந்த அழைப்பு அது. மணியும் தன் குடும்பத்தினரோடு தன் கிராமத்திற்கு வர சம்மதித்தான்.

அந்த கிழட்டு உருவம் தன் மகனைத் தன் கடைசி காலத்திலாவது பார்த்து விட வேண்டும் என்ற ஏக்கத்தில் மணி தங்கியிருக்கும் வீட்டிற்குள்  நுழைந்தாள் அந்தத் தாய்.

அய்யோ பேய் என்று அலறினாள் மணியின் மகள். வந்திருப்பது தன் தாய்தான் என்று அறிந்தும், "யார் நீ?"  என்றான் மணி.

வழி தெரியாமல் வீடு மாறி வந்துவிட்டேன் என்று கூறி திரும்பினாள் அந்தத் தாய்.

அந்த குருடிதான் தன் தாய் என்பதை தன் மகளும்,மனைவியும் அறியாதிருந்ததை நினைத்து மகிழ்ந்தான் மணி. அந்தத்தாய் அவளின் ஒற்றைக்கண் வழியே அழுது கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

இறுதியாக, ஒருநாள் அந்தத்தாய் மரணப் படுக்கையில் படுக்கிறாள். மணியும்  தன் தாயைப் பார்க்க தயக்கத்தோடே செல்கிறான்.

அந்த ஏழைக்குடிலில் ஒரு விளக்கு அணையும் தருவாயில் எரிந்து கொண்டு இருக்கிறது. அந்த விளக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அணைந்து விடலாம்.

ஆம்! மணியின் தாயும் அப்படித்தான் இருந்தாள். அந்த கிழட்டு உருவம் தன் வாழ்நாளின் இறுதி மூச்சை வாங்கிக் கொண்டிருந்தது.கூடவே அவளின் கையில் ஒரு கடிதமும் இருந்தது.தன் மகன் மணிக்காக எழுதப்பட்ட இறுதிக் கடிதமது..

அந்த கடிதம் இவ்வாறு விரிவடைகிறது.

மணியே! என் கண்மணியே! என் கண்ணின் மணியே! நான் இறுதியாக உனக்குச் சொல்ல ஒரு செய்தி உண்டு.

நான் இருந்தாலும் அல்லது இறந்தாலும் உன்னோடு இருப்பேன்!
ஆம், உன்னோடு இருப்பேன்! ! எவ்வாறு என்கிறாயா?

 நீ சிறு வயதாக இருந்த பொழுது  உனக்கு ஒரு விபத்து நேரிட்டது.அந்த விபத்தில் உன் கண்களில் ஒன்று பாதிக்கப்பட்டது.

"என் மணியால் ஒரு கண்ணோடு இந்த உலகில் வாழ முடியாது" என்று மருத்துவரிடம் கெஞ்சினேன், கதறினேன்,மன்றாடினேன். ஆனால் பலன் ஏதும் இல்லை. எங்களால் முடியாது என்று முடிவாகக் கூறினார் மருத்துவர்.

இறுதியாக, என் கண்களில் ஒன்றை எடுத்து உனக்குப் பொருத்தப்பட்டது.

அப்படிதான் என் கண் ஊனமானது; உன் கண் குணமானது.
அதனால் சொல்கிறேன் நான் இருந்தாலும், இறந்தாலும் உன்னோடு, உன் கண்ணோடு கண்ணாக இருப்பேன். இப்படிக்கு உன் அன்புத்தாய்!

 என்று அந்த கடிதம் முடிவடைகிறது.

தாயின் தியாகத்தை உணர்த்தும் இந்த சிறுகதை அனைவரின் நெஞ்சையும் உருகச்செய்யும் என்று நம்புகிறேன். ஆனால் நாம்தான் தாயின் தியாகத்தைப் புரிந்து கொள்வதே இல்லை.

ஒரு குழந்தைப் பிறக்கிறது. அதற்கு எதுவும் தெரியாது. தெரிந்தது எல்லாம் எப்பொழுதாவது சிரிப்பது அல்லது எப்பொழுதுமே அழுவது.

இயற்கையின் விந்தயைப் பார்த்தீர்களா? ஈரறிவு மூன்றறிவு கொண்ட ஊர்வன, பரப்பான மற்றும் பாலூட்டிகள் கூட சில மணிதுளிகளிலேயே தன் சுயத்தால் வாழ்க்கையை வாழத் தொடங்குகிறது.

மான் கன்று பிறந்த சில மணிகளில் தன் தாய்க்கு இணையாக ஓடுகிறது.
ஆனால் இயற்கை விந்தையின் மணிமுடியாய்த் திகழும் மனிதன்?

 தினசரி கடன்களை செய்ய குறைந்தது 6 வயது வரையிலாவது  பெற்றோரின் உதவித் தேவைப்படுகிறது. அதிலும் குறிப்பாக, தாயின் உதவியை குழந்தை நாட வேண்டியுள்ளது.

குழந்தை எவ்வளவு அழகாக இருந்தாலும், தன் தேவையை உணர்த்த அழுது கொண்டே இருப்பது மனிதனை வெருப்படைய வைக்கிறது.தந்தை கூட ஒரு கட்டத்தில் வெறுத்து விடுகிறான். ஆனால் தாய்?

ஒரு குழந்தை அழுகிறது.அது ஏன் அழுகிறது என்று தாய் மட்டுமே உணர்கிறாள்.

பசியால் அழலாம். அஜீரணத்தினால் அழலாம், தூக்கத்திற்கு அழலாம், உடல் நலக் குறைவால் அழலாம், ஏன் எறும்பு கடித்தால் கூட அழலாம். அல்லது வேறு பல காரணத்தினால் கூட அழலாம்.

இதைத் தாய் மட்டுமே சரியாக உணர்ந்து தன் குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்கிறாள். அதுதான் தாய்.

இதே இடத்தில் தந்தை இருந்தால்,  சிறிது நேரத்திலேயே என்னடா இது சனியன் அழுது கொண்டே இருக்கிறது என்று கோபம் அடைவான். இதுதான் தந்தை.

ஒரு குழந்தைக்கு உரிமை கொண்டாடுவதில் தாய்க்கும் தந்தைக்கும் சம அளவு பங்கு இருந்தாலும் அக்குழந்தையைப் பேணிகாப்பதில் தாயே முன்னிலை வகிக்கிறாள்.

அதனால்தான், மாதா-பிதா- குரு-தெய்வம் என்று தாயை முன்னிலைப் படுத்தினார்கள் போலும்!

தாயை முன்னிலைப்படுத்தி அதிக பக்கங்கள் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதுதான். ஆனால் இது போன்ற பகுதியை விரும்புவோர் குறைவு என்ற எண்ணம் தோன்றுவதால் நிறுத்திக் கொள்கிறேன்.

ஆம், இதுதான் "இருட்டு அறை" போன்ற படங்களைக் கொண்டாடுகிற சமூகமாக காட்சியளிக்கிறதே!

 தாயைப்போற்றுவோம்! தாய்மையைப் போற்றுவோம்!!
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

அன்புடன் .........
மணியரசன் ரங்கநாதன்..


நேரமிருந்தால்...........


தமிழ்க் கூறும் நல்லுலகப் புகழ் பெற்ற பட்டினத்தார், தன் தாயாருக்குத் தகனக்கிரியைச் செய்யும்போது பாடிய, கல்லையும்  கசிந்துருகச் செய்யும் பாடலைப் படித்துப் பாருங்களேன்.

1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி ?

2.முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் – தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன் ?

3. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன் ?

4. நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீமூட்டுவேன் ?

5. அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு ?

6.அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு ?

7. முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவ யிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

8. வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ – மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை

9. வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய் ?

10. வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் – பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

அன்புடன் .........
மணியரசன் ரங்கநாதன்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives