Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அறிவியல் அறிவோம்: கொட்டாவி விட்டால் நீங்கள் மூளைக்காரர்!


ஆசிரியர் தீவிரமாகப் பாடம் நடத்தும்போதோ,
அலுவலகக் கூட்டத்தில் அதிகாரி பேசும்போதோ கொட்டாவி வந்தால் சங்கடத்துக்கு உள்ளாவோம். காரணம், ஒருவருக்குக் கொட்டாவி வந்தால், அவருக்குத் தூக்கம் வருகிறது, பேச்சில் ஆர்வமில்லை என்று எதிரில் இருப்பவர் புரிந்துகொள்வார். புதிதாக வெளிவந்துள்ள ஆய்வு முடிவைக் கேட்டால், கொட்டாவி வருவது கௌரவமான விஷயம்தான் என்று எண்ணத்தோன்றும்.

நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆண்ட்ரூ காலப் உள்ளிட்டோர் நடத்திவரும் ‘பயாலஜி லெட்டர்’ எனும் ஆய்விதழில் சமீபத்தில் இதுபற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது. யூடியூபில் பதிவுசெய்யப்பட்டுள்ள வீடியோவில் எலி, பூனை, யானை, குரங்கு, சிம்பன்ஸி, மனிதன் உள்ளிட்ட 29 விலங்குகளின் கொட்டாவிக் காட்சிகள் உள்ளன. இதை ஆராய்ந்தபோது, மனிதக் குரங்கு, சிம்பன்ஸி போன்ற மனிதச் சாயல் விலங்குகள் ஏனைய விலங்குகளைவிடக் கூடுதல் நேரம் கொட்டாவி விடுவது தெரியவந்தது.

மனிதனின் கொட்டாவி சுமார் 6 நொடிகள் நீள்கின்றன என்றால், மிகச் சிறிய மூளையுடைய எலியின் கொட்டாவி 1.5 நொடிகள்கூட நீடிப்பதில்லை. அதேநேரத்தில், மனித மூளையின் எடைக்குச் சமமான மூளையைக் கொண்ட ஆப்பிரிக்க யானையின் கொட்டாவி, மனிதனைவிடச் சற்றே குறைவாக இருந்தது. கொரில்லா, ஒட்டகம், சிங்கம், குதிரை, ஆப்பிரிக்க யானை எல்லாம் மனிதனைவிடக் குறைவான காலமே கொட்டாவிவிட்டன.

ஆக, மூளையின் மேலே உயர்சிந்தனைப் பகுதி எனக் கருதப்படும் ‘கார்டெக்ஸ்’ பகுதியில் உள்ள மூளை செல்களின் எண்ணிக்கைக்கும் கொட்டாவியின் கால நேரத்துக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. 1,200 கோடி கார்டெக்ஸ் நியூரான் கொண்டுள்ள உடல் அளவு, கபாலம் அல்லது கீழ்த்தாடை அளவுகளுக்கும் கொட்டாவி விடும் காலத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் ஆராய்ந்தார்கள். ஆனால், அப்படி எந்தத் தொடர்பும் இல்லை. ஆக, சிக்கல் மிகுந்த சிந்தனையின் பிறப்பிடம் எனக் கருதப்படும் கார்டெக்ஸ் பகுதி நியூரான் எண்ணிக்கைக்கும் கொட்டாவி விடும் கால அளவுக்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, கூடுதல் வேலையின்போது மூளை வெப்பமடையும், அதனை குளிர்விக்கத்தான் கொட்டாவி வருகிறது எனும் கருத்து உடலியல் ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கிறது.

வாயை அகலமாகத் திறந்து காற்றை உள்ளே இழுக்கும்போது, குளிர்ந்த ரத்த ஓட்டம் மூளைக்குப் பாயும் என்று அவர்கள் சொன்னார்கள். அதுவும் இந்த ஆய்வு முடிவுடன் இயைந்துபோகிறது.

ஆக, கொட்டாவி விடுபவர்களை சிந்தனைச் சிற்பிகளாகப் பார்க்க வேண்டிய காலம் வரலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives