சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர் நியமனம் செல்லாது: உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2012

சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர் நியமனம் செல்லாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்தில் அரசு பல்வேறு வழிகாட்டுதல் உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு உள்ளூர் அடிப்படையில் நியமனம் செய்வது செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டுதல் உத்தரவுகளைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்டஅங்கன்வாடிப் பணியாளர் நியமனத்தை எதிர்த்தும், தங்களுக்கு நியமனம் வழங்கக் கோரியும் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இவற்றை விசாரித்த நீதிபதி வினோத் கே.சர்மா இவ்வாறு உத்தரவிட்டார்.   இம்மனுக்களை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி திங்கள்கிழமை அளித்த தீர்ப்பு:அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்துக்கு தமிழக அரசு ஒவ்வொரு காலகட்டத்திலும் விதிமுறைகளை அளித்து அதைப் பின்பற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. நியமிக்கப்படுபவர் திருமணம் ஆனவராகவும், வயது, கல்வித் தகுதி, இருப்பிடம், இடஒதுக்கீடு போன்றவற்றுக்கானஅரசின் விதிகளுக்கு முரணாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   சில இடங்களில் நேர்காணல் நடத்தவில்லை என்றும் சிலர் நேர்காணல் அழைப்புக் கடிதம் வரவில்லை எனவும், சிலர் விண்ணப்பம் திரும்பி வந்துவிட்டது, சிலர் வயது வரம்பில் பிரச்னை எனப் பல்வேறு குளறுபடிகளுடன் நடந்த நியமனங்களை சுட்டிக்காட்டி மனு தாக்கல் செய்துள்ளனர்.  சத்துணவு மற்றும் அங்கன்வாடிகள், குழந்தைகள் நலமையங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 28,596 சமையலர், உதவியாளர், அமைப்பாளர் பணியிடங்களுக்கும் நேர்காணல்மூலம் உள்ளூரில் வசிப்பவரையே நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.   இதன் பின்னர் 1:4 என்ற விகிதத்தில் நியமிக்க உத்தரவிட்டது. பின்னர் அதில் ஊனமுற்றோருக்கும் ஒதுக்கீடு செய்தது. முன்னதாக 2008-ல் சமூக அடிப்படையிலான இடஒதுக்கீட்டைப் பின்பற்றுமாறும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதிலும் சில இடத்தில் மதச் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.    இதே காலகட்டத்தில் ஏற்கெனவே அங்கன்வாடிகளில் பணிபுரிபவர்களில் 25 சதவிகிதத்தினரை பதவி உயர்வு மூலம் நிரப்பவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகள் எல்லாம் நடைமுறையில் உள்ள நிலையில் காலிப்பணியிடம் உள்ள இடத்தில் உள்ளூரில் வசிப்பவரையே நியமனம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது சரியல்ல.   ஒருவரது வசிப்பிடத்தை அடிப்படையாக வைத்துப் பணி நியமனம் வழங்க மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கேவிரோதமானது. எனவே, அரசு ஏற்கெனவே பிறப்பித்த அனைத்து உத்தரவுகள் வழிகாட்டுதல்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அந்தந்த மாவட்ட நிர்வாகம் தகுதியானவர்களை விண்ணப்பிக்கஅறிவிக்க வேண்டும்.   அந்த விண்ணப்பங்களை அரசு பிறப்பித்த உத்தரவு வழிகாட்டுதல்களுக்கு உள்பட்டு இடஒதுக்கீட்டு முறையில் வகுப்புவாரி பட்டியலிட வேண்டும். மாவட்ட அளவில் தேர்வுக் குழுவை அமைத்து, பட்டியல்படி நேர்காணல் நடத்தி யாருக்கு கூடுதல் தகுதிகள் உள்ளதோ அவரைபணிக்கு நியமிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இரண்டு மாதத்துக்குள் அரசு நிறைவேற்ற வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.   இத்தீர்ப்பு காரணமாக ஏற்கெனவே பல்வேறு இடங்களில் அங்கன்வாடிகளுக்கு நியமனம் பெற்றவர்கள் பணியில் சேர்வது கேள்விக்குறியாகிஉள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி