அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தியது ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2013

அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தியது ஏன்?

தமிழக அரசின் பல்வேறு துறைகள், காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,க்கு சரிவர தராததன் காரணமாக, பெரும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், குரூப்-4 தேர்வில் தேர்வு பெற்று, பல்வேறு துறைகளில், பணியில் சேர்ந்தவர்களை, தேர்வாணையம், நேற்று மீண்டும் அழைத்து, கலந்தாய்வு நடத்தி, புதிய உத்தரவை வழங்கியது. குரூப்-4 தேர்வில் தேர்வு பெற்ற தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர்கள், சுருக்கெழுத்தர்களுக்கு, கடந்த மாதம், துறை வாரியாக, பணி ஒதுக்கீடு உத்தரவுகளை, தேர்வாணையம் வழங்கியது. பெரும்பாலானோர், சம்பந்தபட்ட துறைகளில், பணியில் சேர்ந்துவிட்டனர். வேலையில் சேரச் சென்ற இடத்தில், காலியிடம் இல்லை என்ற அதிர்ச்சியும், பலருக்கு ஏற்பட்டது. சில துறைகளில், காலி இடங்கள் இல்லாத நிலையிலும், ஒதுக்கீடு பெற்று வந்தவர்களை, வேலையில் சேர்த்துக்கொண்டது. காலியிடங்கள் இல்லாமல், வேலை கேட்டும், பலர், தேர்வாணையத்தை அணுகினர். இந்த குளறுபடிகளில் சிக்கிய, 500க்கும் மேற்பட்டோரை, தேர்வாணையம், நேற்று மீண்டும் அழைத்து, புதிதாக கலந்தாய்வு நடத்தியது. தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கை, பணியாளர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பல பேர், கடந்த மாதம் சம்பளம் பெற்றுள்ளனர். இந்த மாதத்திற்கும், விரைவில் சம்பளம் பெற உள்ள நிலையில், வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக உத்தரவு வழங்கப்பட்டு உள்ளன. திருவண்ணாமலையை சேர்ந்த, தட்டச்சர் மகேஸ்வரி கூறுகையில்,"கடந்த மாதம் துவக்கத்தில் பணியில் சேர்ந்து, ஒரு மாதம் சம்பளம் வாங்கிவிட்டேன். திடீரென, மீண்டும் கலந்தாய்வு என, கடிதம் அனுப்பினர். வேறு துறை, வேறு பணியிடம் என, கிடைத்தால்,பல பிரச்னைகள் ஏற்படும்" என்றார்.இதுகுறித்து, தேர்வாணைய வட்டாரங்கள் கூறியதாவது: அரசுத் துறைகளில் இருந்து, சரியான காலியிடங்கள் எண்ணிக்கை வரவில்லை.இதுதான், ஒட்டுமொத்த குழப்பங்களுக்கும் காரணம். எங்களுக்கு, காலியிடங்களை காட்டிவிட்டு, அந்த இடங்களில், கருணை அடிப்படையில், பணி நியமனம் செய்துள்ளனர். இது தெரியாமல், வேலையில் சேரச் சென்றவர்களிடம், "காலியிடம் இல்லை" என, தெரிவித்து, திருப்பி அனுப்புகின்றனர். சில துறைகளில், காலி இடங்களை ஏற்கனவே நிரப்பிய போதும், கூடுதலாக, புதிய பணியாளர்களையும் சேர்த்துள்ளனர். இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்து, புதிதாக உத்தரவு வழங்கவே, கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதனால், பெரிய அளவிற்கு, யாருக்கும் பிரச்னை இல்லை. மேலும், இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு வழங்கும் கலந்தாய்வை, விரைவில் நடத்த உள்ளோம். அதற்கு முன்னதாக, முதலில் உத்தரவு வாங்கியவர்களின் பிரச்னையைசரிசெய்யவே, கலந்தாய்வு நடத்தப்பட்டது.இவ்வாறு தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி