ஆங்கில வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து,தமிழ் வழி பாடப்பிரிவுகள் பல்வேறு பள்ளிகளில் மூடப்படுகிறது.ஆங்கிலேயர் நம் மண்ணை
விட்டு சென்று, நூற்றாண்டு கண்டும்,அவர்கள் விதைத்து சென்ற ஆங்கில மொழி மட்டும்,ஆணிவேர் போல் அசையாமல் நிலைத்து விட்டது.மொழி என்பது, இருவரை இணைக்கும் பாலம். ஒரு மொழியை, இஷ்டப்பட்டு படித்தால், ஆறு மாதங்களில் கற்று கொள்ள முடியும். ஆனால், தாய்ப்பால் போல நம் உடம்பில் இருக்கும் தமிழ் மொழியை, தள்ளி வைத்து விட்டு, இன்று ஆங்கில வழி கல்வி ஆரம்பமாகியுள்ளது.அரசு சார்பில், ஒன்று, ஆறாம் வகுப்பு, ஆங்கில வழி கல்வி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. மாறி வரும் கால சூழல், ஆங்கிலத்துக்கு அதி முக்கியத்துவம் மிகுந்ததாக மாறி வருகிறது. ஆங்கில வழி கல்வி ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளில், ஆங்கிலம், தமிழ் இரண்டு பாடப்பிரிவுகளையும் சேர்த்து நடத்தவே உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், இதற்கான புதிய வகுப்பறை வசதி, ஆசிரியர்கள் நியமனம், உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை. புத்தகம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வழி கல்விக்கு பாடம்எடுக்கும் ஆசிரியர் தான், ஆங்கில வழி கல்விக்கும் எடுத்து வருகிறார். ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களிடம், ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும், என்று கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பேசமுடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழ் வழி கல்வியில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர், ஆங்கில வழிக்கு மாற்றி வருகின்றனர். பெயருக்கு ஒன்றிரண்டு குழந்தைகளை வைத்து பாடம் நடத்த முடியாமல், அவர்களையும் ஆங்கில வழி கல்விக்கு மாற்றி வருகின்றனர் ஆசிரியர்கள்.பள்ளி கல்வித்துறை சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில், ஆங்கில வழி கல்வி ஆரம்பித்த நகர்புற பள்ளிகளில், பெரும்பாலான பள்ளிகளில், தமிழ் வழி கல்வியில் மாணவர்கள் இல்லை என்பது தெரியவந்தது. தமிழ் வழி கல்வி என்பது மெல்ல மூடுவிழாவைகண்டு வருகிறது.தமிழாசிரியர் செயம்கொண்டான் கூறும்போது: ஆங்கிலம் ஒரு மொழி தானே தவிர அறிவல்ல.எந்த மொழியில் கல்வி கற்றாலும், தாய்மொழியில் தான் சிந்திக்க முடியும், என்பதுமொழியியல் அறிஞர்களின் கருத்து. ஆங்கில வழியில் கற்பது தான் அறிவின் உச்சம் எனஎண்ணுவது அறியாமையே. தாய்மொழியில் கற்கும்போது தான் சிந்தனை தூண்டப்படுகிறது. இயற்கை மூச்சுக்கும், செயற்கை மூச்சுக்கும் வேறுபாடு உண்டு. அதுபோலத்தான், தாய்மொழி கல்வி கற்பதற்கும், அந்நிய மொழி கற்பதற்கும் உள்ள வேறுபாடு. ஆங்கில வழியில் இயங்கும் பள்ளிகளும், தமிழில் விளக்கமளித்துத்தான், பாடங்களை புரிய வைக்கின்றனர். ஆங்கிலத்திலேயே பேசி படிப்பதனால் யாருக்கும் பயன் இல்லை. தமிழை அறிந்தவர்கள், பேச்சாற்றலிலும், சிந்தனை ஆற்றலாலும் சிறந்து விளங்குவார்கள், என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களை கூறலாம். அரசின் ஆங்கில வழி கல்வி பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கென தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். தமிழை பாதுகாக்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி