தபால் பட்டுவாடா ஆசிரியர்களால் மாணவர்கள்...பாதிப்பு! சி.இ.ஓ., அலுவலகத்தில் உலாவுவதாக புகார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2013

தபால் பட்டுவாடா ஆசிரியர்களால் மாணவர்கள்...பாதிப்பு! சி.இ.ஓ., அலுவலகத்தில் உலாவுவதாக புகார்.


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில், தபால் பட்டுவாடா செய்யும் பணியில், சில ஆசிரியர்கள் உலாவுவதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை
சார்பில், ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. மாணவர்கள் இடைநிற்றல், குழந்தை தொழிலாளர் மீட்டல், இடம்பெயர்தல் தடுத்தல் ஆகியவற்றை கண்டறிந்து, அவர்களுக்கு கல்விக்கான வாய்ப்புகள் ஏற்படுத்துகிறது.மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தந்தாலும், ஆசிரியர்களின் பங்களிப்பு இல்லையென்றால், தேர்ச்சி என்பது இல்லாத ஒன்றாகிவிடும். அதற்காக, கடந்த சில ஆண்டுகளாக, காலியான பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து சிரமங்களை குறைக்க, தாங்கள் விரும்பிய இடத்தில் பணியாற்ற, ஆண்டு தோறும் கவுன்சலிங் நடத்தப்படுகிறது. இருந்தும், சில ஆசிரியர்கள், விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சில ஆசிரியர்கள், தங்களது தினசரி வகுப்புகள் முடிந்தவுடன், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, டியூஷன் எடுத்தல், விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ் எடுத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு ஈடுபாட்டுடன் கல்வி போதிக்க முடியாத நிலை நீடிக்கிறது.இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி சி.இ.ஓ., மாவட்ட தொடக்கப் பள்ளி அலுவலர் அலுவலகத்தில் இருந்து, அரசின் நலத்திட்ட செயல்பாடுகள், அலுவல் பணிகள், தேர்வு பணி, மாணவர் மற்றும் ஆசிரியர் விவரங்கள், தபால் மூலமாக கேட்கப்படும்.அந்த, கடிதங்களை, சம்பந்தப்பட்ட பள்ளியின் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் மூலமாக, பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கொடுக்கப்படும். அவர், உரிய விவரங்களை சேகரித்து, மீண்டும், உதவியாளர் மூலமாக, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்.ஆனால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில், ஆசிரியர்கள் சிலர், தங்களது பள்ளி தொடர்பான கடிதங்களை சமர்பித்து வருகின்றனர். அவர்கள், நாமக்கல்லில் இருந்து, பல்வேறு பள்ளிக்கு செல்வதால், தினசரி தபால் பட்டுவாடா பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.தபால் பட்டுவாடா செய்யும் ஆசிரியருக்கு, பள்ளி வர வேண்டிய நேரத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட தபால் பட்டுவாடா ஆசிரியர்கள், காலை, 10 மணிக்கு சி.ஓ.ஓ., மற்றும் டி.இ.ஓ., அலுவலகத்தில் தபாலை கொடுத்துவிட்டு, மதியம் தான் பள்ளிக்கு செல்கின்றனர்.ஆசிரியர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு, தபால் பட்டுவாடா பணிகளை செய்வதால், மாணவர்களின் கல்வித் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உரியநேரத்தில் வகுப்புக்கு செல்லாததால், மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.எனவே, "சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் தலையிட்டு, பள்ளி ஆசிரியர்களை, அலுவலக தபால்களை பட்டுவாடா செய்ய பயன்படுத்தக் கூடாது' என, மற்ற ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி