பிளஸ் 2 தேர்வில் பிட் அடித்தால் மாணவர்கள் 2 ஆண்டு பரீட்சை எழுத முடியாது: தேர்வுத் துறை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2014

பிளஸ் 2 தேர்வில் பிட் அடித்தால் மாணவர்கள் 2 ஆண்டு பரீட்சை எழுத முடியாது: தேர்வுத் துறை முடிவு


பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் இந்த தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட அளவிலான ஆய்வு அலுவலர்கள் கூட்டம் நடந்தது.
இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 10 பறக்கும் படையும், தென்சென்னை, மத்திய சென்னை, கிழக்கு சென்னை, வடசென்னை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 4 பறக்கும் படைகளும் அமைக்கப்படும். தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் என 2800 தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்வு அறையில் துண்டுச்சீட்டு வைத்திருந்தாலோ, அச்சிடப்பட்ட புத்தகத்தை வைத்திருந்தாலோ ஓராண்டு அவர்கள் தேர்வு எழுத தடை விதித்தும், துண்டுச்சீட்டை பார்த்து எழுதுதல் மற்ற மாணவர்களின் விடைத்தாட்களை பார்த்து எழுதுதல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாண வர்களை இரண்டு ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் தேர்வு நேரத்திலோ அல்லது தேர்வு முடிந்து வெளியில் செல்லும்போதோமுறைகேடான செயல்களில் நடந்துகொள்ளும் மாணவர்கள், மற்ற மாணவர்களின் விடைத்தாளை வாங்கி எழுதுவது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் நிரந்தரமாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும்.மேலும் அந்த மாணவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. தவறான முறையில் தேர்வு நடைபெறுவதாக திடீர் ஆய்வின் போது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளாக இருந்தால் தேர்வு மையம் மற்றும் அங்கீகாரம் ரத்து செய்வதுடன் அப்பள்ளி மாணவர்களை வேறொரு பள்ளியுடன் சேர்ந்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு அறைக்குள் அறை கண்காணிப்பாளர், தேர்வெழுதும் மாணவ, மாணவியர் கண்டிப்பாக செல்போன், பேஜர் வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வைத்திருந்தால் துறை அலுவலர் கள் அல்லது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து மேல்தொடர் நடவடிக்கை எடுப்பார்கள்.

சிறப்பு ஏற்பாடுகள்


*டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர், காதுகோளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோர் சொல்வதை எழுதுபவர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு, ஒரு மணி நேரம்கூடுதல் என சலுகைகள் வழங்கப்படுகிறது.
*வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மேலும் இரண்டு இரவுக் காலலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
*தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் அமைக்கப்படுகிறது.
*அனைத்து மாவட்ட தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. அக்குழு தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளும்.
*பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த 12 இணை இயக்குநர்களுக்கு தலா 3 மாவட்டம் வீதம் பொறுப்பு ஏற்று அவர்கள் அனைத்து தேர்வு நாட்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
*சில தேர்வு மையங்களில் நிரந்தர கண்காணிப்பு குழுக்கள் இருந்து கண்காணிக்கும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி