பிளஸ் டூ தேர்வு: தேவையான தூக்கம்... நிறைய மதிப்பெண்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2014

பிளஸ் டூ தேர்வு: தேவையான தூக்கம்... நிறைய மதிப்பெண்கள்!


பிளஸ் டூ தேர்வு ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. இரவு, பகலாகக் கண் விழித்து மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பார்கள். எப்படியாவது நிறைய மார்க்எடுக்க வேண்டும் என்பதற்காக
மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் படாத பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள். ""படித்தவை நன்கு மனதில் பதிய வேண்டுமானால், தேவையான அளவுக்கு நன்றாகத் தூங்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்.சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் அவரிடம் பேசியதிலிருந்து...""வரும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலேயே பிளஸ் டூ தேர்வுகள் ஆரம்பமாகின்றன.

நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற விருப்பத்தில் மாணவர்கள் ஓய்வின்றி இப்போது படித்துக் கொண்டிருப்பார்கள்.படித்ததை நினைவில் வைத்துக் கொள்ளும் பணி மூளையினுடையது. படித்ததை நன்றாக நினைவு வைத்துக் கொள்ள மூளைக்குச் சக்தி வேண்டும். மூளைக்குச் சக்தி கார்போஹைடிரேட்டிலிருந்து கிடைக்கிறது. மூளைக்குச் சக்தி தரும் உணவுகளை மாணவர்கள் உண்ண வேண்டும்.ஆனால் படிக்கிற மாணவர்கள் இப்போது அதிகம் சாப்பிடுவது சிப்ஸ், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பிஸ்கெட்கள், இனிப்பு பானங்கள் போன்றவற்றைத்தான். இந்த உணவுகளைச் சாப்பிட்டால் மூளை சோர்ந்து போகும். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் ஜீனி என்கிற வெள்ளைச் சர்க்கரை கலக்கப்பட்டிருக்கும். அந்த இனிப்புச் சத்து உடலுக்குள் போனதுமே கணையம் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். இனிப்பைச் செரிக்கச் செய்வதற்கு இன்சுலின் அதிக அளவில் சுரக்க ஆரம்பித்துவிடும். இன்சுலின் அதிக அளவில் சுரந்தால் உடனே மூளை சோர்ந்து போகும்.எனவே தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு இம்மாதிரியான உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

மூளை சோர்ந்து போனால் எப்படி நன்றாகப் படிக்க முடியும்? படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள முடியும்?இதற்குப் பதிலாக பழங்களைத் தின்னக் கொடுக்கலாம். ஒரு வாழைப் பழம் சாப்பிட்டால் உடனே மூளைக்குச் சக்தி கிடைத்துவிடும். வாழைப் பழத்தில் உள்ள ஃபிரக்டோஸ் இந்தச்சக்தியைத் தரும். வாழைப் பழம் தவிர, வேறு பழங்களையும் மாணவர்கள் சாப்பிடலாம். பழங்களில்நார்ச் சத்து உள்ளது.கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, தீட்டப்படாத அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு மிகவும் உகந்தது.

இந்த தானியங்களில் உள்ள நுண்ணுயிர் சத்துகள் மூளைக்குச் சக்தியைத் தருகின்றன.முளைகட்டிய பச்சைப் பயறு, கடலைப் பருப்பு, கொண்டைக் கடலை போன்றவற்றை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இவற்றில் புரதம், கார்போஹைடிரேட், நல்ல கொழுப்பு உள்ளது. எள் உருண்டை, எள் துவையல் மாணவர்களுக்கு மிகவும் நல்லது. நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். மூளைக்கு ஆற்றல் தருவதோடு, அதனுடைய ரத்த ஓட்டத்தையும் சீராக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் மாணவர்கள் நன்றாகப் படிக்க முடியும். படித்தது நினைவில் நிற்கும்.சில மாணவர்கள் இரவு, பகல் தூங்காமல் கண் விழித்துப் படிப்பார்கள். தேவையான அளவுக்குத் தூங்காவிட்டால் படித்தது நினைவில் நிற்காது. படித்த பின்பு தூங்கிவிட்டால் படித்ததெல்லாம் மறந்துபோய்விடும் என்று சில மாணவர்கள் நினைப்பார்கள். அது தவறு. எனவே நாளைக்கு தேர்வு என்றாலும் தேவையான அளவு தூங்க வேண்டும்.யோக நித்திரை என்ற யோகாசனப் பயிற்சியைச் செய்ய வேண்டும். த்ராட்டகா என்ற யோகாசனப் பயிற்சி நினைவாற்றலை அதிகப்படுத்தும். ரத்த ஓட்டம் நன்றாகவும் சீராகவும் நடைபெற மூச்சுப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். ஸீத்காரி என்ற பயிற்சிமன அழுத்தத்தைக் குறைக்கும். வஜ்ராசனம் செய்தால் முதுகு நேராக இருக்கும். தண்டுவடம் நேராக இருக்கும். இதனால் கவனிக்கும் திறன் அதிகரிக்கும். காது மடல்களைப் பிடித்துக் கொண்டு செய்யும் யோகாசனப் பயிற்சியையும் செய்ய வேண்டும்.

இப்போது இந்த யோகாசனப் பயிற்சிகளைப் பள்ளிகளிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள். நகர, கிராமப்புற மருத்துவமனைகளிலும் கூட யோகாசனம் தெரிந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள்.இவ்வாறு உண்ணும் உணவு, அருந்தும் பானங்கள், தூக்கம், உடற்பயிற்சி, யோகாசனப் பயிற்சிகள் மூலமாக மாணவர்கள் நன்றாகப் படிக்க முடியும். படித்ததை நன்கு நினைவில் வைத்துக் கொள்ள முடியும். உற்சாகமாகத் தேர்வுகளை எழுத முடியும். நிறையமதிப்பெண்களைப் பெற முடியும்'' என்கிறார் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி