பிளஸ்–2 கணித தேர்வில் எதிர்பார்த்த கேள்விகள் வரவில்லை தேர்வு எழுதிய மாணவ–மாணவியர் ஏமாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2014

பிளஸ்–2 கணித தேர்வில் எதிர்பார்த்த கேள்விகள் வரவில்லை தேர்வு எழுதிய மாணவ–மாணவியர் ஏமாற்றம்


பிளஸ்–2 கணித தேர்வில் எதிர்பார்த்த கேள்விகள் வரவில்லை என்று மாணவ–மாணவிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

பிளஸ்–2 கணித தேர்வு

பிளஸ்–2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 3–ந்தேதி தமிழகம் முழுவதும் தொடங்கியது. மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதும் இந்த தேர்வுகளுக்காக, தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 50 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள், இயற்பியல், பொருளாதாரம் ஆகிய தேர்வுகள் முடிவடைந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நடந்தன.

தொழிற்கல்வி, பொறியியல் போன்ற படிப்புகளை விரும்பும் மாணவர்களுக்கு கட்–ஆப் மார்க்கிற்கு கைகொடுக்கும் பாடங்களில் முக்கியமான ஒன்று கணிதவியல் பாடமாகும். அதே போல, மருத்துவம் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ள இருக்கும் மாணவ–மாணவியருக்கு விலங்கியல் தேர்வு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

எதிர்பார்த்த கேள்விகள் வரவில்லை

நேற்று நடைபெற்ற தேர்வு குறித்து சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி எப்.ஆயிஷா பர்வீன் கூறியதாவது:–பொதுத்தேர்வுகளில் மிக மிக முக்கியமானது கணிதமாகும். இந்த தேர்வுக்காக கடைசியாக 5 வருடங்களில் நடந்த பொதுத்தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு போன்ற வினாத்தாள்களை நன்றாக படித்துவிட்டு வந்தேன். தொடர்ந்து இடம் பெற்ற பொதுவான கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்தேன்.தேர்வு அறையில் வினாத்தாளினை கையில் வாங்கிய உடனேயே, எதிர்பார்த்த கேள்விகள் வராதது கண்டு சிறிது வருத்தம் அடைந்தேன். இருந்தாலும், சிறப்பாகவே தேர்வினை எதிர்கொண்டு எழுதியுள்ளேன்.இவ்வாறு மாணவி ஆயிஷா கூறினார்.

‘பாஸ்’ஆவது...

மற்றொரு மாணவி எம்.வித்யா கூறும் போது, ‘‘வினா எண் 55 (கட்டாயக்கேள்வி) முற்றிலும் எதிர்பாராதது ஆகும். நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட இந்தமுறை சிறிது குழப்பமடைந்தனர். 10–மார்க் கேள்விகள் எளிதாகவே இருந்தது. புத்தகம் முழுவதும் ஒழுங்காக படித்திருந்தால் மட்டுமே, நிச்சயம் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் வகையில் வினாத்தாள் இருந்தது. எனினும் கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் வராதது வருத்தம் தான்’’.
எளிதாக இருந்தது
விலங்கியல் தேர்வினை பொருத்தவரையில் மாணவ–மாணவிகள் எளிமையாகவே இருந்தது என்று தெரிவித்தனர். மாணவிகள் மலர்விழி, ஜே.கிறிஸ்டியனா, பி.சினோபா ஆகியோர் கூறியதாவது:–
விலங்கியல் தேர்வு எளிதாகவே இருந்தது. கேள்விகள் அனைத்தும் படித்த பாடத்திலிருந்தும், பொதுவான வினாக்களாகவும் வந்திருந்தன. இதனால் இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 3 மற்றும் 5 மார்க் வினாக்கள் ஏற்கனவே கேட்கப்பட்டுள்ளதாகவே இருந்தது. இந்த தேர்வில் நாங்கள் 180–க்கு மேல் மதிப்பெண்கள் எடுப்பது உறுதி.இவ்வாறு மாணவிகள் கூறினார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி