ஐந்து ஆண்டுகளில் ஐம்பது சதவிகித அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2014

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது சதவிகித அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலை?


அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு முட்டையுடன் சத்துணவு, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவசச் சீருடைகள்,
இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவசப் பாட நூல்கள், தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு.மேலும், பதினோராம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவசப் பேருந்து வசதி, கல்வி உதவித்தொகை என எவ்வளவோ சலுகைகளை வழங்கியபோதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் என்னதான் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைக் கொண்டு வந்தபோதிலும், ஆசிரியர்களுக்கு எவ்வளவுதான் பயிற்சிகள் வழங்கிக் கற்பித்தபோதிலும் பெற்றோர்கள் எதையும் ஏற்கத் தயாராக இல்லை. அண்மைக்காலமாக, அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாகக் குறைந்துவருவதே இதற்குச் சான்றாகும்.பணம் கட்டிப் படித்தாலும் ஆங்கிலக் கல்வியே தேவை என்ற மாயை உருவாகிவிட்டதால், நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களில்கூட மெட்ரிக் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெற்றோர்களின் ஆங்கில மோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் பள்ளிகள் கல்வியை வியாபாரமாக்கி மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.தமிழக மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தி வந்த திராவிடக் கட்சிகள், ஆட்சியைப் பிடித்ததும் அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதை நிறுத்தினார்களேயொழிய, தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதைத் தடுக்கவில்லை.

இன்றைக்கு எல்லா தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் இந்தி ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. எந்த ஒரு பெற்றோரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. மாறாக, இந்தி கற்பிக்காத தனியார் பள்ளிகளைப் பெற்றோர் ஏற்றுக்கொள்வதில்லை.தாய்மொழிக் கல்வி - தமிழ் வழிக்கல்வி என்று குரல் கொடுக்கும் திராவிடக்கட்சியினர் தங்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் ஆங்கில வழிக்கல்விவழங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலேயே படிக்க வைக்கின்றனர்.மத்திய அரசு எல்லா மாநிலங்களிலும் நவோதயா வித்யாலயா என்னும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை ஆரம்பித்தது.

ஆனால், தமிழகத்தில் மாறிமாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சி அரசுகள் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க அனுமதி அளிக்க மறுத்து வருகின்றன. அப்பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுவதுதான் அப்பள்ளிகளைத் தொடங்க அனுமதி மறுப்பதற்குக் காரணம்.எந்தப் பள்ளியில் படித்தாலும் ஒரே பாடத்திட்டம்தான், ஒரே பாடம்தான் என்றஉண்மை தெரியாத பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் கேட்கும் தொகையைக் கடன்பட்டாவது செலுத்துகின்றனர். இதன் விளைவாக, 200 மாணவர்கள் படித்த அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 20 மாணவர்கள்கூட இல்லை.முன்பெல்லாம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்பிப்பதற்குப் போதுமான நேரம் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 20 நாள்கள் கட்டாயப் பயிற்சி அளிக்கப்படுகிறது.மத்திய அரசு வழங்கும் நிதியை எப்படியாவது செலவு செய்தாக வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் பதில் சொல்லியாக வேண்டும் என்று இப்படித் தேவையில்லாத பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரம்குறைந்துவிட்டது.இன்றைக்குப் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகத்தான் உள்ளன. இந்நிலையில் மாதத்துக்கு 2, 3 முறை தலைமை ஆசிரியர்களுக்குக் கூட்டம் நடத்தப்படுகிறது. இது இல்லாமல் மாதத்துக்கு இரண்டு முறையாவது ஏதாவது விவரம் கேட்டுத் தலைமை ஆசிரியர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வரவழைக்கப்படுகின்றனர்.இதனால் இரண்டு ஆசிரியர்கள் வேலைசெய்யும் பள்ளிகளில் ஓர் ஆசிரியர்தான் 5 வகுப்புகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. அவரால் அத்தனை வகுப்புகளையும் பார்க்கத்தான் முடிகிறதே தவிர, எந்த வகுப்புக்கும் பாடம்நடத்த முடிவதில்லை.தமிழகத்தைப் பொறுத்தவரையில் கல்வியில் அரசியல் புகுந்துவிட்டது. ஒரு கட்சி கொண்டுவரும் பாடத்திட்டத்தை மற்றொரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மாற்றி அமைக்கிறது.இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற சூழ்நிலைதான் நிலவும். இந்நிலை தொடர்ந்தால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும்.

இந்நிலையைப் போக்க தமிழ் மொழிப்பாடத்தைத் தவிர்த்து, மற்ற ஏனைய பாடங்களைமத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தையே தமிழக அரசும் ஏற்று நடத்தலாம்.ஆங்கில வழியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அந்தப் பாடப் புத்தகங்களையே வழங்கிவிடலாம். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்கலாம். இதன் மூலம் கல்வியில் அரசியல் புகுவதைத் தவிர்க்க முடியும். அத்துடன் கல்வியும் தரமானதாக இருக்கும்.எல்லா அரசுப் பள்ளிகளிலும் தமிழ்வழி வகுப்புகளுடன் ஆங்கிலவழி வகுப்புகளும் நடத்தப்பட வேண்டும். ஆங்கிலவழியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.இப்பொழுது அரசுப் பள்ளிகளில் உள்ள ஆங்கிலவழி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும்.
எந்தப் பள்ளியில் படித்தாலும் ஒரே பாடத்திட்டம், ஒரே பாடநூல் என்பதைப் பெற்றோர்கள் உணரும்படியான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்கவைக்கும் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்கவைப்பார்கள்.எல்லா தொடக்கப் பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமில்லாத ஒரு விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம்.

இந்தி விரும்பாத பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இந்தி கற்பிக்கப்படுவதைத் தவிர்க்கவும் செய்யலாம்.இதனால் இந்தி கற்க வேண்டும் என்பதற்காகவே தனியார் பள்ளிகளுக்குத் தங்கள்குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் அரசுப் பள்ளியிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்க வாய்ப்பாக அமையும்.அரசுப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தியான குழந்தைகள்தான் முதல் வகுப்பில்சேர்க்கப்படுகின்றனர். ஆனால், எந்த ஒரு குழந்தையின் பெற்றோரும் தங்கள் குழந்தையை 5 வயது பூர்த்தியாகும் வரை வீட்டில் வைத்திருக்க விரும்புவதில்லை. அதனால்தான் 3 வயதிலேயே தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து விடுகின்றனர்.தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுவதில்லை.

தொடர்ந்து அந்தப் பள்ளியிலேயே முதல் வகுப்பில் சேர்த்துவிடுகின்றனர்.தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்த எல்லா தொடக்கப் பள்ளிகளிலும் 3 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு நர்சரி வகுப்புகளைத் தொடங்க வேண்டும். இவ்வகுப்புகளில் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்குக் கற்பிக்கப்படுவதுபோல அடிப்படைக் கல்வியை வழங்க வேண்டும் அல்லது ஏற்கெனவேநடைபெற்றுவரும் அங்கன்வாடி மையங்களைத் தொடக்கப் பள்ளிகளுடன் இணைத்து நர்சரி வகுப்புகளை நடத்தலாம்.இதன்மூலம் நர்சரி வகுப்புகளில் உள்ள குழந்தைகள் அப்படியே தொடக்கப்பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர வாய்ப்பாக அமையும். முதல் வகுப்பில் சேர்ந்துவிட்ட குழந்தை வேறு எந்தத் தனியார் பள்ளிக்கும் செல்லாது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.கற்பித்தல் பணி அல்லாத மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள்,மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, வாக்காளர் சேர்ப்பு, குடும்ப அட்டை சரிபார்ப்பு போன்ற பல வேலைகளுக்கு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.அதேபோல, பள்ளிக் குழந்தைகளைக் கொண்டு அவர்கள் வயதுக்குப் புரியாத விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்படுகின்றன. போதைப் பொருள் ஒழிப்புப் பேரணி, எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி, ரத்ததான விழிப்புணர்வுப் பேரணி போன்ற பேரணிகள் நடத்தக் குழந்தைகளை ஈடுபடுத்தி அவர்கள் கல்வி பயிலும் நேரத்தைக் குறைக்கக்கூடாது.

வகுப்பறைக்குள் மாணவர்கள் பாடப்புத்தகம் எடுத்து வரக்கூடாது என்றும், பலவகுப்பு மாணவர்களை ஒன்றாக உட்கார வைத்துக் கற்பிக்க வேண்டும் என்றும், அச்சிடப்பட்ட அட்டைகளைக் கொண்டுதான் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகிறது.இதுபோன்ற தேவையற்ற கெடுபிடிகளாலும், கற்பிப்பதில் ஆசிரியர்கள் ஆர்வம் இழக்கின்றனர். மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாத வகையிலும், மாணவர்கள்ஆர்வமாகக் கற்கும் வகையிலும் ஆசிரியர்கள் கற்பிக்குமாறு அறிவுறுத்தினால்மட்டும் போதுமானது. அரசுப் பள்ளி ஆசிரியர்களால் தரமான மாணவர்களை உருவாக்க முடியும்.இனியும் காலம் தாழ்த்தாமல் அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், இன்னும் ஐந்து ஆண்டுகளில்ஐம்பது சதவிகித அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலை உருவாகிவிடும்.

10 comments:

  1. if govt teachers areappointed properly and govtschools are allowed to take hindi andd english mediu m and if advertisement by govt are good surely we will get

    ReplyDelete
  2. Well said in above article.

    Utmost steps to b taken immediately to save govt schools & mainly the mass of poor children of govt schools. They r not 'lab rats' to check all new education methods.

    Private schls just teaching the lessons properly without any disturbance managed by strict principal even the teachers r with less qualified.

    But govt school tchrs r often disturbed by many unwanted educational plans(within a short term other system wil b forced to follow if one method followed). Too govt schl tchrs teaching r not properly supervised during teaching. Though supervised the higher officials use only arrogant worse words & only they blame the disadvantages in classroom. None of the official never say a single positive thing happened in classroom teaching. Then how come the govt tchrs(40%) who hav interest in teaching shows further step to improve their educational skill. Since their hard work goes vain as sugar mixed in river to make a juice - they too keep mum as remaining govt teachers not showing interest in teaching.

    Only affected is the poorest govt schl children who joined in dream to lift up his her life by education.

    Many govt staffs, scientists, nobel prize winners, chief ministers r made from govt schools of tamilnadu. We all join hands & want to prevent it from destruction.

    ReplyDelete
  3. Govt which has to undertake school is interesting to sell wine .(tasmac). So the wine shop owners are starting schools.

    ReplyDelete
  4. Even after Right to education Act is come into force there is no change/development in our education system. No guideslines of NCTE have been implimented except conducting TET.

    ReplyDelete
  5. Good article about our primary education

    ReplyDelete
  6. Good article about our primary education

    ReplyDelete
  7. Good article about our primary education

    ReplyDelete
  8. Govt is closing the school in one hand and. It is opening tasmac shop on another hand

    ReplyDelete
  9. Any govt school teacher is willing to join his kids in govt school? It is time to self evaluvation fot govt about its teaching standard.

    ReplyDelete
  10. Indha governmentla 50%laam romba kammi koodiya viraivil mothathula oothi moodiruvaanuka paarunkalain

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி