பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வுக்கான கேள்வித்தாளில் இடம் பெற்ற ஒரு கேள்வி தெளிவாக இல்லை என்பதால் மாணவர்கள் பதில் எழுத திணறினர்.
பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. தமிழ் பாடத்தில் இரண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று ஆங்கிலம் முதல்தாள் தேர்வு நடந்தது. இதற்கான கேள்வித்தாள் எளிதாக இருந்தது என்று மாணவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் 53வது கேள்வி மட்டும் பதில் எழுதமுடியாத அளவுக்கு இருந்தது.பொதுவாக 53வது கேள்வியில் ஏதாவது ஒரு படத்தை கொடுத்து அந்த படத்தில் உள்ள பொருட்கள், அல்லது அந்த படத்தில் இருந்து தெரியவரும் விஷயம் ஆகியவற்றை பதிலாக எழுத சொல்வார்கள்.
நேற்றைய தேர்வில் ஒரு பையன் மீன் தொட்டியை பார்ப்பது போல படம் கொடுக்கப்பட்டு, அது தொடர்பாக 5 கேள்விகள் கேட்டிருந்தனர். அதற்கான பதில்கள் ஒன்று அல்லது இரண்டு வரிகளில் எழுத வேண்டும். மொத்தம் 5 மதிப்பெண்கள். ஆனால் நேற்றைய கேள்வித்தாளில் இடம் பெற்ற படம் தெளிவாகவே இல்லை. உற்றுப் பார்த்தாலும் அதில் உள்ள விஷயங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் மாணவர்கள் அதற்கு விடை எழுதமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே அந்த கேள்விக்கான 5 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்கும்படி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிளஸ் 2 கணக்கு தேர்வு: 8 மார்க் போனஸ்
ReplyDeleteதமிழக அரசு உத்தரவு
--- தி இந்து நாளேடு
பிளஸ் 2 கணித தேர்வில் வினாத்தாள் அச்சுப்பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு 8 மார்க்கும், ஆங்கிலவழி மாணவர்களுக்கு 7 மார்க்கும் போனஸாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 கணித தேர்வு மார்ச் 14-ம் தேதி நடந்து முடிந்தது. வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில் 4-வது கேள்வியில் ‘ரோ’ என்று அழைக்கப்படும் கணித குறியீட்டுக்கு (ரேங்க் ஆப்) பதிலாக ‘பி’ என்ற ஆங்கில எழுத்து தவறாக அச்சிடப்பட்டிருந்தது.
அதேபோல, 6 மதிப்பெண் பகுதியில் 47-வது கேள்வியில் ‘லாக் எக்ஸ் பேஸ் இ’ என்று இருப்பதற்குப் பதிலாக ‘லாக் இ டூ பவர் எக்ஸ்’ என்பது போன்ற கணித குறியீடுகள் தவறாக அச்சிடப்பட்டு இருந்தன. அச்சுப்பிழை காரணமாக இந்த இரு கேள்விகளுக்கும் மாணவர்கள் சரியாக விடையளித்திருக்க வாய்ப்பு இல்லை.
இந்த இரு கேள்விகளுக்கும் விடை எழுத முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் (7 மார்க்) வழங்க வேண்டும் என்று தேர்வெழுதிய மாணவ, மாணவிகள், கணித ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுவாக, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் கேள்விகளில் தவறு இருந்தால் அந்த கேள்விகளுக்கு உரிய மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக (கிரேஸ் மார்க்) மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். இதுதொடர்பாக பாட வல்லுநர் குழு அமைத்து அரசு தேர்வுத் துறை முடிவு செய்யும்.
நிபுணர் குழு அறிக்கை
அந்த வகையில், இந்த ஆண்டு பிளஸ் 2 கணித தேர்வு கேள்வியில் தவறாக அச்சிடப்பட்டிருந்த கேள்விகள் குறித்து ஆராய நிபுணர்கள் குழுவை தேர்வுத்துறை அமைத்திருந்தது. மூத்த கணித ஆசிரியர்கள் அடங்கிய நிபுணர் குழு அச்சுப்பிழை இருப்பதை உறுதிசெய்து அறிக்கை அளித்தது.
பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு கடந்த 21-ம் தேதி தொடங்கிய நிலையில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் முதன்மை தேர்வர்களும், கூர்ந்தாய்வு அதிகாரிகளும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மேற்கொண்டனர்.
அப்போது கணித தேர்வுக்கான விடைக்குறிப்பு (கீ ஆன்சர்) அவர்களிடம் வழங்கப்பட்டது. அதில், கணித தேர்வில் தவறாக அச்சிடப்பட்டிருந்த 4-வது கேள்விக்கும் (1 மார்க் வினா), 47-வது கேள்விக்கும் (6 மார்க் வினா) மாணவர்கள் விடை அளிக்க முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்வழி கணித வினாத்தாளில் தவறாக அச்சிடப்பட்டிருந்த 16-வது கேள்விக்கும் (1 மார்க்) இதேபோன்று முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த கேள்வி ஆங்கிலவழி வினாத்தாளில் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தது).
கல்லூரி ஆசிரியர் ஆராய்ச்சி பணிக்கு உதவித்தொகை ரூ.1 லட்சமாக அதிகரிப்பு
ReplyDeleteபயனாளிகளின் எண்ணிக்கை 5 மடங்காக உயர்வு
--- தி இந்து நாளேடு
அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி உதவித்தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக இந்த ஆண்டு அதிகரிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெறு வோரின் எண்ணிக்கையும் 5 மடங்கு உயர்த்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 74 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் வகையில், அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறு ஆய்வு திட்டத்தின் கீழ் உதவித் தொகையாக ரூ.20 ஆயிரமும் முதுகலை மாணவர்களுக்கு குறுஆய்வு திட்டத்தின் கீழ் ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது.
இந்த உதவித்தொகை திட்டங்களின்கீழ் ஆண்டுதோறும் 20 ஆசிரியர்களும், 20 மாணவ, மாணவிகள் மட்டுமே பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில், அரசுக் கல்லூரி ஆசிரியர்களையும் மாணவர் களையும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட ஊக்குவிப்பதற்காக உதவித்தொகை மற்றும் அதை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் உறுப்பினர்-செயலாளர் பேராசிரியர் கரு.நாகராஜன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிறு ஆய்வு திட்டத்தின் கீழ் புதிய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாநில உயர்கல்வி கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கலாம்.
முதலில் தாங்கள் மேற் கொள்ள உள்ள ஆராய்ச்சி குறித்து கருத்துருவை அனுப்ப வேண்டும். நிபுணர் குழு ஒப்புதல் அளித்தால் அந்த ஆராய்ச்சிப் பணிக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இதுவரை, 20 ஆசிரியர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வந்தது. வரும் கல்வி ஆண்டு முதல் இந்த உதவித்தொகை ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகளின் எண்ணிக்கையும் 20-ல் இருந்து 100 ஆக உயர்த்தி வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
100 மாணவர்கள்
குறு ஆய்வு திட்டத்தின் கீழ், அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலை முதல் ஆண்டு, 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டி விண்ணப்பிக்கலாம். அனுமதிக்கப்படும் ஆராய்ச்சிப் பணிக்கு ரூ.15,000 வழங்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இந்த திட்டத்தின் கீழ் 100 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு பேராசிரியர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.