பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறதா 25 விழுக்காடு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2014

பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறதா 25 விழுக்காடு?


பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பல நிலைகளிலும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது பிளஸ்2 மாணவர் சேர்க்கை, பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு என பள்ளிகள் மும்முரமாகிவிடும். ஆனால் ஏழைகளுக்காக ஒவ்வொரு பள்ளியும் ஒதுக்க வேண்டிய 25% இடங்கள் பற்றி மாணவர் சேர்க்கையில் எந்த அளவுக்கு உரிய அக்கறை செலுத்தப்படுகிறது என்கிற கேள்வி கல்வித் துறைக்கும்தனியார் பள்ளிகளுக்கும் கசப்பானதாகத்தான் இருக்கும்.பள்ளிக் கல்வித் துறையின் ஆணைப்படி, ஏழை மாணவர்களுக்கான 25% ஒதுக்கீட்டில்மாணவர் சேர்க்கை நடத்தும் நடைமுறைகள் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது தேர்தல் நடப்பதால் அரசு இயந்திரம் எந்த அளவுக்கு இதை சிறப்பாக செய்து முடிக்கும் என்று தெரியவில்லை.

கல்வித் துறை இதற்காக களம் இறங்கினாலும்கூட, எந்த அளவுக்கு தனியார் பள்ளிகள் ஒத்துழைக்கும் என்பதும் தெரியவில்லை. காரணம்- கடந்த இரு ஆண்டுகளாக, விதிகளை மதிக்காத பள்ளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான்.சென்ற ஆண்டு ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் வெறும் 60 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே அந்த 25% ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டனர். அதாவது 23,248 மாணவர்கள் (மொத்த இடங்கள் 58,619) மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறிய பள்ளிகள் 950. இவை அனைத்தும் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவை.

சேர்க்கப்பட்ட மாணவர்களில் பலர், ஏழைகளாகக் கணக்குக்காட்டி, இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது வேறுகதை.இந்த திட்டம் ஏன் இந்த அளவுக்கு புறக்கணிப்பை சந்தித்துள்ளது என்பதற்கு சில காரணங்கள்: ஏழை மாணவர்களை தனித்து பிரித்து வைக்கக்கூடாது என்பதால், தங்கள் பணக்கார நுகர்வோர் (பெற்றோர் என்கிற சொல் இங்கு பொருந்தும் என்று தோன்றவில்லை)தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளிக்கு அனுப்பத் தயங்குகிறார்கள் என்பதும், 25% ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு அரசு தர வேண்டிய கல்விக்கட்டண ஈட்டுத்தொகை கடந்த இரு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்பதும்தான்.மேலும், தனியார் பள்ளிகளில் 50%க்கும் அதிகமானவை சிறுபான்மையினர் நடத்தும்பள்ளிகள். இதில் 90% பள்ளிகள் கிறிஸ்துவ நிர்வாகம் சார்ந்தவை. சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு அரசு இத்திட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்துள்ளது. மிகவும் சிறப்பாக நடைபெறும் இந்த பள்ளிகளுக்கு விதிவிலக்கு அளிப்பது எந்த வகையிலும் நியாயமே இல்லை என்று தனியார் பள்ளிகளின் சங்கங்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

ஆனால் வாக்குவங்கியைக் கணக்கில் கொண்டு அரசு விதிவிலக்களிக்கிறது.தமிழ்நாட்டில் இவ்வாறு விதிவிலக்கு பெறும் பள்ளிகள் எவையெவை? அப்பள்ளிகள் சிறுபான்மையினரால் நடத்தப்பட்டாலும் அங்கு பயிலும் மாணவர்களில் எத்தனை பேர் சிறுபான்மையினர்? இவர்களுக்கு விலக்கு பெறும் உரிமை உண்டா இல்லையா என்பதை வரன்முறைப்படுத்தும் முயற்சியையாகிலும் செய்ய வேண்டும். ஆனால் வாக்கு வங்கி அரசியலில் இது சாத்தியமா?இத்தகைய சூழலில், பள்ளிகள் தாங்களாகவே 25% ஒதுக்கீட்டை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்வதால் இந்த திட்டம் உண்மையாக நிறைவேற்றப்படப்போவதில்லை. ஏழைமாணவர்கள் என்ற பெயரில் நடுத்தர வருவாய்ப் பிரிவினரைச் சேர்த்து, அவர்களிடம் அரசுக் கட்டணம் போக, மீதிக் கட்டணத்தை ரகசியமாக வசூலிக்கும் போக்குதான் நடக்கும். இதற்குக் கல்வித் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.தற்போது உயர்கல்வியில் இருக்கும் கலந்தாய்வு முறைதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு. ஒவ்வொரு நகரத்திலும் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அனைத்துக்குமான கலந்தாய்வை பள்ளிக் கல்வித்துறை அந்தந்த ஊரில் பொது இடத்தில் நடத்த வேண்டும்.

பெற்றோரின் வருவாய்ச் சான்று, இருப்பிடச் சான்று, குழந்தையின் உடன்பிறப்புகள் படிக்கும் பள்ளி ஆகிய மூன்றின் அடிப்படையில், அந்த குழந்தை எந்தப் பள்ளிகளில் சேர முடியும் என்பதை தரவரிசைப்படுத்தலாம். கலந்தாய்வின்போது எந்தெந்த பள்ளிகளில் இடம் இருக்கிறதோ அதில் தங்கள் குழந்தைகளை பெற்றோர் சேர்த்துவிட முடியும்.பள்ளிப்படிப்புக்கு கலந்தாய்வா என்று சிலர் புருவம் உயர்த்தலாம். ஆனால் 25% ஒதுக்கீடு உண்மையாக தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்றால், கலந்தாய்வும், சிறுபான்மையினர் பள்ளிகளையும் இத்திட்டத்திற்கு உட்படுத்துவதும் தவிர்க்கவியலாதவை.அனைத்துப் பகுதியினருக்கும், பிரிவினருக்கும் பொதுவான சமச்சீர் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கம். அது கல்வியால் மட்டுமே சாத்தியப்படும். அதனால், குறைந்த வருவாய் பிரிவினருக்கான 25% ஒதுக்கீட்டை உறுதி செய்வது அரசின் கடமை!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி