பலன் தருகிறது 'சிறப்பு வினா வங்கி' புத்தகம்: படித்தவர்கள் 61 மதிப்பெண் அள்ளுகின்றனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2014

பலன் தருகிறது 'சிறப்பு வினா வங்கி' புத்தகம்: படித்தவர்கள் 61 மதிப்பெண் அள்ளுகின்றனர்


படிப்பில் பின் தங்கியிருக்கும் மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில், பள்ளிக்கல்வித் துறை, இந்த ஆண்டு, சிறப்பு வினா வங்கி புத்தகத்தை தயாரித்து வழங்கி இருந்தது.
நேற்று நடந்த, 10ம் வகுப்பு கணிதத் தேர்வில், இந்த புத்தகத்தில் இருந்து, 61 மதிப்பெண்களுக்கான, 17 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த புத்தகத்தைப் பார்த்து தயாரான மாணவ, மாணவியர், அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிறப்பு வினாவுக்கு:

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும்; குறிப்பாக, தோல்வியின்விளிம்பில் உள்ள மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, பள்ளிக்கல்வி இயக்ககம், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு என, சிறப்பு வினா வங்கி அடங்கிய புத்தகத்தை தயாரித்தது. இந்த புத்தகங்கள், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு, விடை அளிக்கும் முறை குறித்து, மாணவர்களுக்கு, ஆசிரியர் விளக்கினார். இதிலிருந்து, பிளஸ் 2 தேர்வில் அதிகளவு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதேபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதத் தேர்விலும், 61 மதிப்பெண்களுக்கு, 17 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.இதுகுறித்து, அரசுப் பள்ளி ஒன்றின் கணித ஆசிரியர் கூறியதாவது: இரு மதிப்பெண் பகுதியில், எட்டு கேள்விகளும், ஐந்து மதிப்பெண் பகுதியில், ஒன்பது கேள்விகளும்,கல்வித் துறை வழங்கிய புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டு உள்ளன. இந்த புத்தகத்தை பார்த்து தயாரான, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர், சுளையாக, 61 மதிப்பெண் பெறுவர். எனினும், எப்போதும் கேட்கப்படும், 'இயற்கணிதம்' என்ற பாடத்தில் இருந்து, 'காரணிபடுத்துக' மற்றும் 'வர்க்கமூலம் காண்க' என்ற கேள்விகள், இந்த முறை கேட்கவில்லை. இது, மாணவர்களுக்கு, ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, அந்த ஆசிரியர் கூறினார்.

மாணவர்கள் வருத்தம்:

'நேற்று நடந்த கணிதத் தேர்வு, பெரிய அளவிற்கு கடினம் இல்லை' என, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்தனர். எனினும், 'ஐந்து மதிப்பெண் பகுதியில், 41வது கேள்விக்கான விடை, பல அடுக்குகள் போட்டும், இறுதியில் விடை வரவில்லை' என, பல மாணவர்கள் தெரிவித்தனர். இதனால், 'சென்டம்' கிடைக்க வாய்ப்பில்லை என, மாணவர்கள்வருத்தத்துடன் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி