எல்.கே.ஜி. புத்தகத்தில் சூரியன் கண்ணாடி அணிந்திருப்பது, சூரியன் உதயமாவது போன்ற சர்ச்சைக்குரிய படங்களை நீக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.இதையடுத்து, இது தொடர்பான வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த ஜி.புரட்சி சுரேஷ் என்பவர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்:எல்.கே.ஜி. இரண்டாம் பருவ பாடப் புத்தகத்தின் 11-ஆவது பக்கத்தில் எஸ் என்றஆங்கில எழுத்துக்கு சூரியன் கண் கண்ணாடி அணிந்திருப்பது போன்று படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட கட்சித் தலைவரைக் குறிக்கும் வகையில் உள்ளது.இது, சட்டத்துக்குப் புறம்பாகவும், கல்வியின் இயற்கை நியதிக்கு எதிராகவும் உள்ளது.இதே போன்று அந்தப் புத்தகத்தின் 94-ஆவது பக்கத்தில் சூரியன் உதயமாவது போன்றஒரு படம் அச்சிடப்பட்டுள்ளது.இதுபோன்ற படங்கள் ஆரம்பக் கல்வியில் அரசியலைப் புகுத்துவது போல அமையும் என்பதால், அடுத்த கல்வியாண்டில் இந்தப் படங்களை நீக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது, பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அந்த சுற்றறிக்கை விவரம்: சர்ச்சைக்குரிய அந்தப் புத்தகத்துக்கு மாநில பொதுக்கல்வி வாரியம் அனுமதி வழங்கவில்லை. மேலும், இந்தப் புத்தகத்தில் உள்ள 11, 94-ஆவது பக்கங்களை நீக்க அனைத்து தனியார் பள்ளிகளையும் அறிவுறுத்த வேண்டும்.இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களும் எடுக்க வேண்டும்.
அதோடு, அனுமதி வழங்கப்படாத புத்தகங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி