100 சதவீதம் தேர்ச்சி உண்மையான வெற்றியா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2014

100 சதவீதம் தேர்ச்சி உண்மையான வெற்றியா?


தேர்வு எழுதிய மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைவது மூலம் கிடைக்கும் வெற்றி உண்மையல்ல என்பது தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது தெளிவாகிறது.
அரசுப் பொதுத் தேர்வுகளில் (10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு) ஒரு பள்ளியின் சார்பில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றுவிட்டால், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதணை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.100 சதவீதம் இலக்கை எட்டுவதற்காக பல பள்ளிகளில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு தொடக்கத்தில் கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.அதுபோன்ற மாணவர்களுக்கு கடைசி நேரத்தில் அரசு பள்ளிகள் மட்டுமே புகலிடமாக அமைகிறது.மே 9ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியான பிளஸ்2 தேர்வு முடிவுகளின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 165 பள்ளிகளில் 47 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளன.

அதில் 4 அரசு பள்ளிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற பள்ளிகள் சாதித்துவிட்டதாக கருத முடியாது.ஏனெனில், பழனி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியின் சார்பில் 3 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அவர்கள் மூவரும் தேர்ச்சிப் பெற்றதால், அந்த பள்ளியும் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தரமான மாணவர்களை வைத்துக் கொண்டு 100 சதவீதம் இலக்கை அடைவது கடினமல்ல.அதே சமயம் பழனி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 591 மாணவிகள் தேர்வு எழுதினர். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திலேயே அதிக மாணவிகள் தேர்வு எழுதிய பள்ளியாகவும் பழனி அரசினர் பெண்கள் பள்ளி இடம் பெற்றது.தேர்வு முடிவுகள் வெளியான போது, 591 மாணவிகளில் 540 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதன் மூலம் 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள பழனி அரசு பள்ளி சாதணை படைத்துள்ளதாக பெருமை அடையலாம்.அதேபோல் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியின் சார்பில் 552மாணவிகள் தேர்வு எழுதியதில், 551 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்திலேயே அதிக மாணவிகளை தேர்ச்சி பெற வைத்த பெருமை இந்த பள்ளிக்கு கிடைத்துள்ளது.100 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற தனியார் பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்களுடன் தேர்வு எழுதிய பள்ளிகள் 16. இதன் மூலம் 100 சதவீதம் தேர்ச்சி என்பது சாதனை கிடையாது என்பது கண்கூடாக தெரியும் உண்மை.இதனை அறியாத பெற்றோர் பலர் குறிப்பிட்ட பள்ளிகளில் படித்தால் மட்டுமே, தங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றுவார்கள் என்ற மனநிலையில் உள்ளனர்.

ஒரே பள்ளியைச் சேர்ந்த 540 மாணவிகளை தேர்ச்சி அடைய வைப்பதற்கு அந்த பள்ளி ஆசிரியர்களின் பணி முக்கியமானது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு பயிற்சிஅளித்து, வெற்றி பெற வைப்பது எளிமையானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.பல பள்ளிகளின் மூலம் புறக்கணிக்கப்பட்ட பின்தங்கிய மாணவர்களை வைத்துக் கொண்டு 200க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பிளஸ் 2 தேர்வை சந்தித்த 11 அரசு பள்ளிகளில், 5 பள்ளிகள் 90 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இந்த சாதனைக்குபின்னால், அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் கடுமையான உழைப்பு இருப்பதை யாரும் போற்றுவதில்லை.

60 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சிபெறும் பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித் துறைவிளக்கம் கேட்கிறது. அதேபோல் சிறப்பான தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு, வெளி உலகுக்கு தெரியும் வகையில் குறைந்தபட்சம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாராட்டுத் தெரிவிக்கலாம். அதன்மூலம் எதிர்வரும் கல்வி ஆண்டில், அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி