பணி நிரந்தரமான 3 நாளில் ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம்; ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2014

பணி நிரந்தரமான 3 நாளில் ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம்; ஐகோர்ட்டு உத்தரவு


பணி நிரந்தரம் செய்யப்பட்டு 3 நாட்கள் மட்டுமே பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அலுவலக உதவியாளர்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளம் அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் மரியபெனடிக்ட்(வயது 63). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

நான், கடந்த 15.6.1980 அன்று வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வணிக வரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு சேர்ந்தேன். கடந்த 1.1.2006 அன்று 10 ஆண்டுகள் பணி முடித்த தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய 2008–ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி 26.3.2010 அன்று அலுவலக உதவியாளராக பணி நிரந்தரம் செய்யப்பட்டேன். 3 நாட்கள் மட்டுமே பணியாற்றிய நான் 29.3.2010 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றேன்.

மறுத்து விட்டனர்

அதன்பின்பு, எனக்கு ஓய்வூதியம் வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். நான், மொத்தம் 29 ஆண்டுகள் 3 மாதம் பணியாற்றி உள்ளேன். இதில், பெரும்பாலான நாட்கள் தினக்கூலி பணியாளராகவே இருந்துள்ளேன்.

நான், தினக்கூலி பணியாளராக இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எனக்கு ஓய்வூதியமும், ஓய்வூதிய பலன்களும் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஓய்வூதியம் வழங்க உத்தரவு

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் நெல்லை வக்கீல் வி.கண்ணன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–

மனுதாரர் நீண்டகாலத்துக்கு பின்பு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது. குறிப்பிட்ட காலத்துக்குள் அவரை பணி நிரந்தரம் செய்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது நியாயமற்றது. அரசு அலுவலர்கள் தற்காலிகமாக பணியாற்றிய காலத்தில் 50 சதவீத காலத்தை ஓய்வூதியத்துக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விதி உள்ளது. அதன்படி, மனுதாரர் தினக்கூலி பணியாளராக பணியாற்றிய மொத்த காலத்தில் 50 சதவீத காலத்தை ஓய்வூதியத்துக்காக எடுத்துக்கொண்டு அவருக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை 3 மாதத்துக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி