ராஜாராம் மோகன்ராயின் பிறந்த தினம்இன்று... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2014

ராஜாராம் மோகன்ராயின் பிறந்த தினம்இன்று...



மே 22 ; உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க பாடுபட்ட ராஜாராம் மோகன்ராயின் பிறந்த தினம்இன்று


நவீன இந்தியாவின் முதல் பெருந்தலைவர் என்று ராஜாராம் மோகன்ராயை சொல்வது பொருத்தமாக இருக்கும். 1772 இல் வங்கத்தில் பிறந்தார் இவர். இவரின் குடும்பம் வைணவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது. முகலாய ஆட்சியாளர்களின் கீழே வரி வசூல் செய்யும் பணியில் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவரின் பால்ய காலத்திலேயே உயர் ஜாதியில் இயல்பாக இருக்கும் வழக்கத்தால் அவருக்கு இருமுறை திருமணம் செய்துவைக்க பட்டது. முதலில் வங்காளி மற்றும் பாரசீகத்தை கற்று தேர்ந்த பின் பாட்னா போய் அராபிய மொழியை கற்றுக்கொண்டார். அங்கே அவரின் ஆசிரியர்கள் அவருக்கு அரிஸ்டாட்டில்,குரான் மற்றும் பைபிளை அறிமுகப்படுத்தினார்கள். பனாரஸில் அவர் சமஸ்க்ருதத்தை கற்றுத்தேர்ந்தார். இப்படி அவர் கற்ற மொழிகள் மட்டும் ஒரு டஜன் !

அவரின் அண்ணன் இறந்ததும் அவரின் கண் முன்னரே அவரின் எதிர்ப்பையும் மீறி அவரின் அண்ணி சதியால் தீக்கிரையாக்கப்பட்டார். கிழக்கிந்திய கம்பெனியில் அதிகாரியாக பல்வேறு ஊர்களில் அவர் பணியாற்றினார். அவரின் முதல் நூல் பாராசீகத்தில் அராபிய மொழியிலான முன்னுரையோடு வெளிவந்தது. அது உருவ வழிபாட்டை தாக்கியிருந்தது. கல்கத்தாவில் வாழ ஆரம்பித்ததும் ஆத்மிய சபையை துவங்கி இந்து மதத்தில் இருந்த மத மற்றும் சமூக தீமைகளுக்கு எதிராக போராட ஆரம்பித்தார்.

பிரம்ம சபையை நிறுவினார் ; பின்னர் அதுவே பிரம்ம சமாஜம் ஆனது. உருவ வழிபாட்டை எதிர்த்ததோடு இல்லாமல் ஜாதிய அமைப்பின் இறுக்கமான தன்மை,அர்த்தமற்ற மத சடங்குகள் ஆகியவற்றை விமர்சனம் செய்தார். ஒரே ஒரு இறைவனை தான் இந்து மதம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் வலியுறுத்துவதாக உறுதிபட சொன்ன அவர் இந்திய மதத்தின் பல கடவுள் வழிபாடு,கிறிஸ்துவத்தின் இறைவன்,அவரின் மகன் மற்றும் புனித ஆவி வழிபாடு ஆகியவற்றை நிராகரித்தார். கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தின் தத்துவ வெளிச்சத்தை இந்துக்கள் அறிய வேண்டும் என்று அவர் இயங்கினாலும்,PERCEPTS OF JESUS நூலில் கிறிஸ்துவின் அற்புத செயல்களை சாத்தியமில்லை என்று நிராகரித்தார். இவ்வாறு இரு மதத்து மக்களின் வெறுப்புக்கும் அவர் ஆளானார்.

இந்து மதத்தை கிறிஸ்துவ மிஷனரிக்கள் தாக்குவதை தீவிரமாக எதிர்த்ததோடு மத மாற்றத்துக்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்தார். மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு பகுதிகளின் தத்துவ சங்கமம் நிகழ வேண்டும் என்று அவர் இயங்கியதோடு எல்லா மதத்தின் நம்பிக்கையாளர்களும் சகோதர்களாக சேர்ந்திருக்க முடியும் என்று நம்பினார். அவரை பழமைவாதிகள் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் ; அதற்கான கூட்டத்தில் இவரை பெற்ற அன்னையே கலந்து கொண்டார். அவரை ஜாதியை விட்டு ஒதுக்கி வைத்தார்கள்.

பதினோரு ஆண்டுகள் சதிக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை அவர் தொடுத்தார். வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார். வில்லியம் பெண்டிங்க் காலத்தில் சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது ராஜா ராம்மோகன் ராயின் உழைப்பாலே நிகழ்ந்தது என்பதே உண்மை.

மேலும் ஆங்கிலேயே நாடாளுமன்றத்துக்கு சதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று ஒரு சாரார் கடிதம் எழுதிய பொழுது கொண்டு வரக்கூடாது என்று உறுதிபட இவரும் கடிதம் எழுதினார். பல்வேறு இறுதி சடங்கு நடைபெறும் இடங்களில் பெண்கள் தீக்கிரையாக்கப்படாமல் இருக்க உறவினர்களிடம் நெடிய சமரச பேச்சுவார்த்தையை நிகழ்த்துகிற பண்பாளராகவும் அவர் இருந்தார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றும்,பல தார திருமணம் கூடவே கூடாது என்றும் அவர் வாதாடினார்.

ஆண்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளியை துவங்கி அதில் ஆங்கிலம் கற்பிக்க ஆரம்பித்தார். கூடவே இயங்கியல் மற்றும் வால்டேரின் தத்துவங்களை அவர் அங்கே கற்பித்தார். பல்வேறு இதழ்களை நடத்திய இந்தியாவின் பத்திரிக்கை துறை முன்னோடி அவர். வங்க மொழியில் இலக்கணம் சார்ந்து பல்வேறு நூல்களையும் அவர் இயற்றினார். ஜமீன்தார்கள் நிலத்தில் பாடுபடும் தொழிலாளியை சுரண்டுவதை அவர் சாடினார். ஆங்கிலேய அரசு ஒரு நிலத்தில் இருந்து எவ்வளவு வரி பெறப்பட வேண்டும் என்பதை உறுதியாக தீர்மானிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை சாடியதோடு இந்திய பொருட்கள் மீதான கடுமையான வரி விதிப்பை நீக்க வேண்டும் என்றும் அவர் முயற்சிகள் எடுத்தார்.

லத்தீன் அமெரிக்காவின் மக்கள் புரட்சி வென்றதும் அவர் ஊரில் உள்ள எல்லாருக்கும் விருந்து போட்டார். அயர்லாந்து மக்களை ஆங்கிலேய அரசு ஒடுக்கிய பொழுது சீர்திருத்த சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக ஆங்கிலேய அரசு நிறைவேற்றா விட்டால் ஆங்கிலேய ஆதிக்கமே இல்லாத பகுதியில் போய் வாழ்வேன் என்று முழக்கமிட்டார். நேப்பல்ஸ் புரட்சி தோல்வியுற்ற பொழுது மனம் வெம்மி முக்கியமான அலுவல்களை ரத்து செய்கிற பண்பும் அவருக்கு இருந்தது. கத்தோலிக்கர்கள் உரிமையோடு பிரட்டனில் வாழ வழி ஏற்பட்ட பொழுது அதை வரவேற்றார்

1831 இல் முகலாய அரசருக்கான ஊக்கத்தொகையை ஆங்கிலேய அரசு ஏற்றித்தர இங்கிலாந்துக்கு பயணம் போன அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்த்தார். சட்டம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நூல்களை அங்கே இருந்து இயற்றினார். பிரிஸ்டோல் நகரத்தில் தங்கியிருந்த பொழுது மரணமடைந்தார். அங்கே எரிக்க வசதிகள் இல்லாததால் புதைக்கப்பட்டார். அவரின் கல்லறையின் மீது இந்த வாசகங்கள் ஒளிர்கின்றன :

இந்திய மக்களின் சமூக,அற மற்றும் பொருளாதார நிலையை முன்னேற்ற அவரின் ஓயாத உழைப்புகள்,உருவ வழிபாடு மற்றும் சதியை நீக்க அவரின் அக்கறை மிகுந்த முயற்சிகள் இறைவனின் மகிமை மற்றும் மனிதனின் நலத்தை மேம்படுத்துவற்றுக்காக வாதிட்ட ,ஓயாது அவரின் செயல்கள் அவரின் நாட்டு மக்களின் நினைவுகளில் நன்றியோடு நிறைந்திருக்கும்.


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி