மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் இரண்டாம் ஆண்டாக ஆங்கில வழிக்கல்வியை துவக்க பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
ஆங்கில வழிக்கல்வி மீதான மோகத்தால் நகர பகுதி மக்கள் மட்டுமின்றி கிராமப் பகுதி மக்களும் தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கைநாளுக்கு நாள் குறைந்தது. தனியார் பள்ளிகளோடு போட்டி போட முடியாததால் அரசு பள்ளிகளுக்கு பூட்டு போடும் சூழல் ஏற்பட்டது. அரசுபள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு 1,450 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவக்குவது என, முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் மட்டும் இக்கல்வித் திட்டத்தை துவக்க கடந்தாண்டு பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்தது. அதன்படி மாவட்டத்தில் 164 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டது. அதில், 3,506 மாணவ, மாணவிகளும், 65 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துவங்கப்பட்ட ஆங்கில வழிக் கல்வியில் 1,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு மேலும் பல அரசு பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியை துவங்க ஆர்வத்துடன் முன்வந்துள்ளன. அதனையேற்ற பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், ஒன்றாம் வகுப்பு, 6மற்றும் 9ம் வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்புகளிலும் குறைந்த பட்சம் 15 மாணவர்கள் சேர்க்கை இருந்தால், அப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை துவங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரண்டாம் ஆண்டாக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவங்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அந்தந்த பள்ளிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, அந்தந்த பள்ளிகளே அச்சிட்டு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது'என்றார்.
விழிப்புணர்வு தேவை
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்ட போதிலும், பெற்றோர் மத்தியில் போதிய அளவு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், ஆங்கில வழிக் கல்வியில் மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது. இதனை தவிர்த்திடமுதல் கட்டமாக ஆங்கில வழிக் கல்வி குறித்து பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
MEDIA USE PANNI POPULAR SEIYALAM
ReplyDeleteடிவி .செய்தித்தாள்.வானொலி போன்ற ஊடகங்கள் வாயிலாக தொடர்ச்சியாக விளம்பரப்படுத்துங்கள்
ReplyDeleteஇதுவரை நன்கு படித்த, திறமையான ஆனால் வாய் மட்டும் பேசாத, இயந்திர அடிமைகள் மெட்ரிக் பள்ளிகளில் மட்டுமே கிடைத்தார்கள். இனி அரசு பள்ளிகளிலிருந்தும் கிடைக்கப்போகிறார்கள். அரசு எந்திரமும், தனியார் கார்பரேட் முதலாளிகளும் எதிர்ப்பார்ப்பது இதுதான், சிறந்த வாய்பேசாத அடிமைகளை. ஏனெனில் ஆங்கிலவழிக் கல்வி பயில்பவர்கள் சுயசிந்தனை என்ற வார்த்தைக்கு பொருள்கூட தெரியாதவர்கள். பெரிய பெரிய உளவியல் அறிஞர்கள்கூட (ரூஸோவிலிருந்து மகாத்மாகாந்தி வரை) குழந்தைகள் அவரவர் தாய்மொழிவழி கல்வி பயிலும்போதுதான் எளிதாகவும், விரைவாகவும் புரிந்துகொள்ளவும், கற்கவும், சுயஅறிவு பெறவும் முடியுமென கூறினர். இன்று அரசு மற்றும் தனியார் துறைகளில் பெரிய பதவிகளில் உள்ளவர்கள் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்தவர்களே. யாராவது மறுக்க முடியுமா.
ReplyDeleteஅரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துபோனதற்கு மக்களின் ஆங்கில மோகமே காரணம் என்று கூறுவது மேம்போக்கான பார்வையே. இன்றும் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியளிப்பதில் முன்னிலையில் நிற்பவை அரசு பள்ளிகளே. ஆயிரக்கணக்கான கிராமங்களை இதுவரை தனியார் பள்ளிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை. அரசு பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் ஓர் ஆசிரியர், இரண்டு ஆசிரியர் பள்ளிகள் இன்றும் நடைமுறையில் உள்ளது. பள்ளிகளில் போதுமான வகுப்பறை வசதி இல்லை, மாணவர்கள் அமர்வதற்கு இருக்கை வசதிகள் இல்லை. குடிநீர் வசதி இல்லை. அடிப்படையான கழிப்பறை வசதிக்கூட இல்லாத அவலம் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் உள்ளது. கழிப்பறை வசதி செய்துதரப்பட்டாலும் தொடர் பராமரிப்பு இல்லாமல், தண்ணீர் வசதி இல்லை. பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசிரியர்களின் அலட்சியப் போக்கும் பெரிய காரணம். இதனை சரிசெய்தாலே அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடியும், பொதுமக்களின் நம்பிக்கையையும் பெறமுடியும். இப்படி அரசிடம் ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு மக்களின் மீது பழியை சுமத்தி தப்பித்துக்கொள்ள பார்ப்பது பிற்போக்குத்தனமானது, கண்டிக்கத்தக்கது.