சத்துணவு மையங்களை ஆய்வு செய்ய 22 குழுக்கள்: ஆட்சியர் அறிவுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2014

சத்துணவு மையங்களை ஆய்வு செய்ய 22 குழுக்கள்: ஆட்சியர் அறிவுப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் உள்ள சத்துணவு மையங்களை ஆய்வு செய்வதற்காக 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.இக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமை தாங்கி பேசியது:விழுப்புரம் மாவட்டத்தில் 2383 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேல்காரணை அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்டு 166 மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க சத்துணவு பணியாளர்கள் வகுக்கப்பட்ட நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். உணவுப் பொருள்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். சமையல் கூடத்தை தினமும் கழுவி சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் கூடத்தைச் சுற்றி கழிவுநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவுப் பொருட்கள் ஈரம். காற்று ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

பருப்பு வகைகளில் பூச்சி, வண்டுகள் பிடிக்காமலிருக்க வாரந்தோறும் வெய்யிலில் உலர்த்த வேண்டும். சமைப்பதற்கு முன்பு உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி சுத்தமாகவும், பசுமையான காய்கறிகளை தகுந்த அளவில் நறுக்கியும் சமைக்க வேண்டும். சமைத்த உணவு பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும்.மதிய உணவு வழங்குவதற்கு முன்னபாக அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்ஆகியோர் உணவினை உண்டு பார்த்து உணவில் எவ்வித நச்சுத் தன்மையும் இல்லை என்பதை உறுதி செய்த பின்பே மாணவ மாணவிகளுக்கு வழங்க வேண்டும். அதேபோல் மரங்களின் கீழ் அமர வைத்து மாணவர்களுக்கு உணவு வழங்கக்கூடாது.இந்த நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய 22 ஒன்றியங்களுக்கும் 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சத்துணவு மையங்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். முறையாக நெறிமுறைகளை கடைபிடிக்கப்படாத சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்பவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவர் என்றார்.

இக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் கோ.ராதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வாசுகி(வளர்ச்சி), இளம்பரிதி(சத்துணவு), ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம்சங் தினகர் பாபு, வருவாய் கோட்டாட்சியர் அனுசுயாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி